நாச்சியார் திருமொழி 48

vishnu 2

நாச்சியார் திருமொழி -48 பாசுரம் 551

ஐந்தாம் திருமொழி பாடல்-7

 

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்

      புணர்வது ஓர் ஆசையினால் என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து

      ஆவியை ஆகுலம் செய்யும்;

அம் குயிலே! உனக்கு என்ன மறைந்து உறைவு?

      ஆழியும் சங்கும் ஒண் தண்டும்

தங்கிய கையவனை வரக் கூவில், நீ

      சாலத் தருமம் பெறுதி

ஆகுலம் – துன்பம்

அம் குயில் – அழகிய குயில்

ஆழி – சக்கரம்

ஒண் தண்டு – வலிமையான கதை

சாலத் தருமம் பெறுதி  – அதிகப்  புண்ணியம் பெறுவாய்

ஊழிக்கால முடிவில் அண்ட சராசரங்களும் ஒடுங்கிய நிலைக்கு வருவதை பாற் vishnuகடல் விளக்குகிறது. உலகனைத்தையும் காக்க பாற்கடலில் திருமால் பாம்பணையில் அறிதுயில் எனப்படும் உறங்காநிலை கொண்டுள்ளார். திருமாலின் இந்தநிலை பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் தன்மையை உணர்த்துகிறது..

அந்நாளிலிருந்தே ஆழ்வார்களும் கவிஞர்களும் பெருங்கடலை நம் உள் மனமாக உருவகப் படுத்தினார்கள்.

வேதங்களும், ஆழ்மனதை, இருள் நிறைந்த பெருங்கடல் என்றும், மேலோட்டமான மனதை, ஒளி நிறைந்த பெருங்கடல் என்றும் வருணிக்கிறது. மேலும் கீழுமாக இருக்கும் நீர்ப் பெருந்திரள்கள் என்கிறது..

ஆழ் மனதின் அடி ஆழங்களிலிருந்து அமிர்தமென இனிமையான பேரலைகள் எழும்பும். மனம் தன் ஒளி மிகுந்து இருக்கும் தருணங்களில், இப் பேரலைகளின் திவலைகளை ருசிக்கும்.

அதாவது நம் மனம் எப்போதும் தெளிவாக இருந்தால் வாழ்க்கை ருசிக்கும்..

நன்மையும் தீமையும் இணைந்து, இறவாமை எனும் அமிர்தம் பெற, நம் அகக்கடலைக் கடையும் அந்த பாற்கடல் தத்துவம், ஒரு ஆதார உருவகமாக விளங்குகிறது.

சந்திரன் கடலலைகளை மேலெழச் செய்கிறான்..காற்றினால் கடலைக் கலக்குகிறான்.

நாராயணன் என்றால், நீரில் சயனித்திருப்பவன் என்று மட்டுமல்ல  தன்னிடத்திலிருந்து தோன்றிய உலகில் வீற்றிருப்பவன் என்றும் பொருள்..சந்திரனிலும் வீற்றிருந்து கோதையைக் காண்கிறான் என்று நினைக்கிறாள்..

அது போல, ஆண்டாளுக்குத், தான், பரந்தாமனின் துணையான அலைமகள் எனும் ஆழ்மன நினைவானது, சந்திரனாய், கண்ணன் தன் முன் தோன்றியபோது, மேலெழும்பியது. அதன் வெளிப்பாடாகவே, அலைகள் ஆர்ப்பரிப்பது போலத், தன் அவயங்கள் ஆர்ப்பரித்து எழுந்தன என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்..

அங்கே பாற்கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் போது அவற்றை அமைதியுறச் செய்ய அதன் மேல் பரந்தாமன் பள்ளி கொண்டதுபோல, தன்னுள் ஆர்ப்பரிக்கும் அவனின் நினைவுகளை அமைதியுறச் செய்ய அவனே வந்து அணைப்பான் என்று எண்ணியிருந்த ஆண்டாளுக்கு, கண்ணன் வரத் தாமதமானதால், ஆர்ப்பரிக்கும் அவயங்களால், மிகுந்த துன்பமடைகிறாள்.. உயிர் போகும் வலி என்பது போல அவதியுறுகிறாள்..

தான் யாரென்று தெளிவாக உணர்ந்ததால் தான், கோதை நாச்சியார், தன் பழைய நிலையை அடைந்து, கண்ணனைப் பிரியாத நிலை பெற விரும்புகிறாள்..

ஆகையால் தான், நன்மை தீமை என கண்ணனுடன் ஊடலையும் கூடலையும் புரிகிறாள்.. அவைகளை இணைத்து, தன் மனதால் கடைந்த இப்பாசுரங்கள் மூலம் நமக்கும் அமிர்தம் தந்து அவளும் அமிர்தமான கண்ணனை அடைய விரும்புகிறாள்..

விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவன் எனப் பொருள் கூறுவர்.

அழகிய குயிலானது கோதையின் வேண்டுகோளுக்கிணங்க எத்தனையோ முறை கூவியும் கண்ணன் வந்த பாடில்லை. ஆகையால், இவள் கூறுவது எல்லாம் உண்மைதானா..தான் பைத்தியக்காரத்தனமாக, தன் இணையுடன் கூடுவதை விட்டுவிட்டு, இவளின் தத்துவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்தது.

அதனால் கோதையிடம் இருந்து தப்புவதற்காக மறைந்து கொண்டிருக்கிறது.. எங்கும் நிறைந்தவனான கண்ணன் அதையும் அறிவான் என்கிறாள் ஆண்டாள்..

தருமம் என்ற சொல்லால், சரியான செயல்களைச் செய்வதையோ  அல்லது சரியான பாதையில் பயணிப்பதையோ குறிக்கிறோம். உலகத்திலுள்ள மனிதர்கள் மட்டுமல்லாமல், எந்த வித பிடிப்பும் இல்லாத வான் வெளியில்,  அண்ட சராசரங்களும், ஒரு ஒழுங்கில் இயங்குவதையும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளாகவே உணர்கிறோம்.

சனாதன தருமம் எனும், வாழ்க்கை வாழத் தேவையான, சரியான வழிமுறைகளைக் கொண்டது, இந்து சமயம்.

“எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்கின்றன வேதங்கள். தனி மனித தருமம், சமூக தருமம், தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்கான தருமம் என்று நான்கு வித தருமங்கள் உள்ளது.

தனி மனித தருமம் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் தினம்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும்…

புற உறுப்புகளையும், அக உறுப்புகளையும் அடக்கி ஆளுதல்..

எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்..

மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்..

கோபப்படாதிருத்தல்..

மனநிறைவு காணுதல்..

தன்னலத்தைத் துறத்தல்..

புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்..

பேராசைப்படாதிருத்தல்..

பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்.

அடக்கத்துடன் இருத்தல்.

மென்மையுடன் இருத்தல்.

கருணையுடன் இருத்தல்.

மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி பெறுதல்..

மன்னிக்கும் தன்மை கொண்டிருத்தல்..

உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருத்தல்..

தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்..

தனி மனித தருமங்களை கடைப்பிடித்தவர்கள் இணையும் போது அது உயர்ந்த சமூகம் ஆகிறது . அப்படிப்பட்ட ஒரு சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய தருமங்கள்

  1. அன்பு
  2. ஈகை
  3. வாய்மை
  4. விருந்தோம்பல்
  5. கீழ்த்தரமான உணர்வுகளை அடக்குதல்.
  6. பிறர்க்குத் துன்பத்தை தரும் உண்மையைத் தவிர்த்தல்.

நாடு சிறக்க வேண்டுமானால், தனி நபர்களும், சமூகமும், எதையும் எதிர் பார்க்காமல்/ தான் பிறருக்குச் செய்த நன்மைகளையும் நினைத்துக்கொண்டிராமல் தியாக உள்ளத்துடன் இருக்க வேண்டும். அதுவே தேசிய தருமம் ஆகும்.

மனித இனம் சிறப்புற, வெவ்வேறு எண்ணங்கள் கொண்ட தனி நபர்களும், பல தரப்பட்ட சமூகங்களும், மற்றும் பல்வேறு  நாடுகளும் ஒன்றிணைந்து, தேவைக்கேற்ப, மேற்கூறிய தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

அது போல குயிலுக்கான தருமமாக, தான் இவ்வாறு வேதனையில் வாடும் போது, ஓடி ஒளிந்து கொள்ளாமல், அவளுக்கு உதவ வேண்டும் என்கிறாள்..

திருமாலின் நான்கு திருக்கரங்களும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவைகளை ஏந்தியிருக்கின்றன.

சங்கை ஏந்திய கை. இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது. அவரிடமிருந்தே நீர், நிலம், தீ, ஆகாசம், காற்று ஆகிய ஐம்பூதங்களும்  தோன்றின என்பதைக் குறிக்கின்றது.

மற்றொரு கையில் உள்ள சக்கரம், அறம் செய்பவர்களைக் காத்தும், கேடு செய்பவர்களைத் தண்டித்தும், தன் பணியைச் செவ்வனே செய்கிறது.

மற்ற இரண்டு கைகளிலுள்ள கதையானது முன்னேற்றம் தரும், வலிமையான அறிவையும், தாமரையானது அருளையும் தருகின்றன.

இவ்வாறு தன்னைத் தீண்டிய ஐம்புலன்களையும் தன் சங்கொலியால் விரட்டியடித்து, தனக்கு கேடு செய்யும் புலன்களைத் தன் சக்கரத்தால் தண்டித்து, தன் புலன்களுக்கு, கண்ணனை அடையும் வலிமையான அறிவைத் தரும் கதை உடையவனை, தன்னிடம் இணையக் கூடிய அருகதை உடையவனை, வரக் கூவுமாறு குயிலை வேண்டுகிறாள் கோதை..

தருமம் என்பதற்கு, கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள்களும் உண்டு. பொதுவாகக்  கொடையாளர்களும், யாசிப்பவர்களும் பயன்படுத்தும் சொல்லாக விளங்குகிறது.

இங்கு மேலோட்டமாக, கண்ணனை வரச் சொல்லி கூவுமாறு   யாசிப்பவளாகத் தோன்றினாலும், தன் கடமை மறந்து ஓடி ஒளிந்த அதன் பணியை நினைவுபடுத்தி, கண்ணனைக் காணும் பேற்றை குயிலுக்கும் கொடுக்க நினைக்கும் கொடையாளியாகத்தான் திகழ்கிறார் கோதை நாச்சியார்..

குயிலை, தனக்கு உதவுவதன் மூலம் அதிகப்  புண்ணியம் பெற்று, அதன் உடனடி பலனாக கண்ணனைக் காணும் பேற்றினை பெரும் பொருட்டே, அவனை வரக் கூவுமாறு சொல்கிறாள்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

Advertisements

நாச்சியார் திருமொழி 47

நாச்சியார் திருமொழி -47 பாசுரம் 550

ஐந்தாம் திருமொழி பாடல்-6vishnu

எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் 
இருடீகேசன் வலி செய்ய 
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் 
முலையும் அழகு அழிந்தேன் நான் 
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை 
கொள்ளும் இளங் குயிலே என் 
தத்துவனை வரக் கூகிற்றியாகில் 
தலை அல்லால் கைம்மாறு இலேனே   

அமரர் – தேவர்கள்

இருடீ கேசன் – ரிஷி கேசன் – முனிவர்களின் தலைவன்

முத்து அன்ன – முத்தைப் போன்ற

வெண் முறுவல் – வெள்ளையான [பற்கள் தெரியும்படியான ] சிரிப்பு

கொத்து அலர் – கொத்துக் கொத்தாக மலர்கள்

காவில்  – சோலையில்

மணித்தடம் – அழகிய இடம்

கண் படை – நித்திரை [கண் உறக்கம்]

கூகிற்றியாகில் – கூவுவாயானால்

வேத வியாசரின் மகனாக சுகர் பிறந்தார்.. அவருக்கு பிரம்மோபதேசம் செய்வித்தவுடன் மகா ஞானியாய் விளங்கினார்..நாரதரால் மேலும் ஞானோபதேசம் செய்விக்கப்பட்டார்.

முழுஞானம் பெற்று சுகப்பிரம்மம் என்று அழைக்கப்பட்டவர், ஒரு நாள் தந்தையைப் பிரிந்து தவத்திற்குச் சென்றார். இவரின் பிரிவால் வாடிய வியாசர், காட்டிற்குள், மகனே!மகனே! என்று அழைத்தபடி சென்றாராம். அங்கிருந்த தாவரங்கள் அனைத்தும், ஏன்? ஏன்? என்று பதில் கூறியதாம். சுகப்பிரம்மமானவர் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறார் என்று உணர்ந்தார் வியாசர்.

தந்தையை விடவும் தவத்தில் சிறந்தவரான சுகப்பிரம்மம், மகரிஷியான சனகரிடமும் ஞான உபதேசம் பெற்றார்.

ஒருமுறை வியாசரும், சுகரும் தேவப் பெண்கள் நீராடும் நதிவழியே நடந்து சென்றனர்.  முன்னால் சென்ற சுகப் பிரம்மத்தை கண்டு அச்சமின்றி நீராடிய தேவப்பெண்கள், பின்னால் வந்த வியாசரைக் கண்டு வெட்கமுற்று ஆடைகளால் உடலை மறைத்தனர்.

தன் இளம் மைந்தனைக் கண்டு இயல்பாகக் குளித்த பெண்கள், கிழவனான தன்னைக் கண்டு பதற்றமடைவது ஏனென்று புரியாமல் வியந்த வியாசர் அவர்களிடம் காரணம் கேட்டார்.

சுகப் பிரம்மத்தின் கண்களுக்கு, அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுவதால், எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார்.. ஆனால் வியாசருக்கு,  ஆண், பெண் என்னும் வேறுபாடுகள் தெரிகின்றன. அதனால் தான் தாங்கள் வியாசரைக் கண்டவுடன் வெட்கமுற்றதாக தேவப் பெண்கள் கூறினர்.

அனைத்திலும் பிரம்மத்தைக் காணும் பக்குவம் சுகமகரிஷிக்கு இருந்தது.

இதனால் தான் ஆண்டாள் சுகப் பிரம்மரை  கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பினாள்.  தூது சென்று வந்த கிளியின் வேண்டுகோளால் தான், ஆண்டாளின் இடது கையில் சுகப் பிரம்மமான கிளி இடம் பெற்றது.

உலகின் எத்திசையிலும் உள்ள தேவர்களும் கடவுளுக்கு நிகரான சக்தி படைத்தவர்கள்..அப்படிப்பட்டவர்களே  விரும்பிப் பணியும் அன்பை உடையவன் பரம்பொருளான இறைவன்.. சுகப் பிரம்மம் போன்ற பல முனிவர்களின் அன்புக்கு உரியவன்..அவர்களின் தலைவன்..

எந்த அறிவால் ஒருவன் கண்டு, கேட்டு, முகர்ந்து, பேசி, ருசித்து உணர்கிறானோ அதை பிரக்ஞானம் எனவும் அந்த அறிவுதான் தேவர்கள் முதல் அனைத்து உயிர்களிலும் உள்ளது என்கிறது ரிக் வேதம் [பிரக்ஞானம் பிரம்ம]

எங்கும் நிறைந்த பரம்பொருளையே பிரம்மம் என்ற சொல்லால் அழைக்கிறோம். அறிவின் இடமாகிய  நம் உடலிலும் அதன் சாட்சியாகத் தான் இருப்பதை விளக்கும் விதமாக ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்கிறது யசூர் வேதம்.

பெயரோ உருவமோ இன்றி, அனைத்துமே ஒன்றாக, படைப்புக்கு முன்பே இருந்த, இப்பொழுதும் அப்படியே இருக்கின்ற, ‘அது’ என்று பொருள் படைத்தது  ‘தத்’.

தத் என்ற சொல்லின் மேலோட்டமான பொருளாக உலகை ஆளும் கடவுளைக் குறித்தாலும் உயிருள்ளவைகளிலும் உயிரற்றவைகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் பிரம்மம் என்பதே உட்பொருளாகும்.

நம்முடைய உடலுக்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்டதாய், நம்முள் இருக்கும் உண்மைப்பொருள், த்வம் எனப்படும்.

த்வம் என்ற சொல்லின் மேலோட்டமான பொருளாக ஐம்பூதங்களாலான மனதும், உடலும், அதன் புலன்களும் என்று கூறப்பட்டாலும்,  இவைகளுக்கு அப்பாற்பட்ட உயிர் என்பதே உண்மை.

‘தத்’ எனும் சொல்லால் குறிக்கப்படுவதும் ‘த்வம்’ என்னும் சொல்லால் குறிக்கப்படுவதும் ஒன்றே என்று உணர்த்த, ‘தத் த்வம் அஸி’ என்கிறது சாம வேதம்.

தனக்குத்தானே, யாரும் அறிவுறுத்தாமலே, அனைத்தின் உள் உறைபவனாக விளங்கும் ஆத்மாவானது, ‘நான்’ என்ற அகந்தையின் ஆதாரம்.

இந்த ஆத்மாவும், உலகம் யாவிலும் நிறைந்துள்ள பிரம்மமும் ஒன்றே என்ற தத்துவத்தை, ‘அயம் ஆத்மா பிரம்ம’ என்பதின் மூலம் உணர்த்துகிறது அதர்வண வேதம்.

முன்பு தான் மேலுலகில் இருந்தபோது, இவை எல்லாம் உணர்ந்து, எப்போதும் முத்துபோன்ற தன் பற்கள் தெரியும்படி வாய் கொள்ளாத சிரிப்புடன், இளமைப் பூரிப்புடன், துடிப்பாகச் செயல்பட்டவள், தற்போது பூவுலகில் பிறந்து, இவை எல்லாம் மறந்து, கண்ணனைக் காணாத துன்பத்தால், சிரிப்பு என்பதையே மறந்து, முற்றிலும் அழகிழந்து விட்டதாகக் கூறுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

இதை எல்லாம் அறிந்த கண்ணபிரானும், தன் மீது இரக்கம் கொள்ளாமல், தன்னுடன் சேர்த்துக் கொள்ளாமல், மஞ்சள் பட்டாடையும், மலர் மாலையும் அணிந்து, புன்முறுவலுடன் பேரழகனாக, அவ்வப்போது தன் முன் தோன்றிப், பின் மறைந்து தனக்கு மிகவும் துன்பம் தருகிறான் என்கிறாள் கோதை நாச்சியார்..

தேவர்கள் சூழ பாற்கடலில் துயிலும் பரந்தாமனைப் போலவே, கொத்துக் கொத்தாக மலர்கள் நிறைந்துள்ள சோலையில் அழகான இடத்தில் கண்ணுறங்குகிறதாம் குயில்..

அதுவும் இளம் குயிலாக இருப்பதால் மேற்கூறிய தத்துவங்களும் அறியாமல், தான் படும் துன்பங்களையும் உணராமல் சுகமாக உறங்குகிறதாம்..

அவ்வாறில்லாமல் தத்துவங்களின் உண்மைப் பொருளான தன் தலைவன் கண்ணன் வருமாறு கூவினால், அந்தக் குயிலுக்கு தன் தலையையே நன்றிக்கடனாகத் தருவதாகக் கூறுகிறாள்..

கோயில்களில் முடி இறக்கி, நம் அகந்தை இறக்கி இறைவனை வழிபடுவதாக, பாசாங்கு செய்யும் நம்மைப் போலல்லாமல், கண்ணனை வருமாறு கூவினால் தன் தலை எனும் அகந்தையை குயிலுக்குப் பரிசாக்கிவிட்டு, தன் தலைவனுடன் சேர விரும்புகிறாள் ஆண்டாள்..

எண் சாண் உடம்பிற்கு, சிரசே பிரதானம் என்பது போல, தன் உடல் இயங்கத் தேவையான தலையையே தருவதாகச் சொல்வதன் மூலம், கண்ணனிடம் தான் கொண்டது, உளப்பூர்வமான அன்புதான் என்று நிரூபிக்கிறாள் கோதை நாச்சியார்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

நாச்சியார் திருமொழி 46

ulaguநாச்சியார் திருமொழி -46 பாசுரம் 549

ஐந்தாம் திருமொழி பாடல்-5

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் 
வில்லிபுத்தூர் உறைவான் தன் 
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் 
பொரு கயற் கண்ணினை துஞ்சா 
இன் அடிசிலொடு பால்அமுது ஊட்டி 
எடுத்த என் கோலக் கிளியை 
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே 
உலகு அளந்தான் வரக் கூவாய்            

            

மென் நடை – மென்மையான நடை

பரந்து – பரவலாக
பொரு – ஒத்த
கயல்  – மீன்
கண் இணை –இரண்டு கண்களும்
துஞ்சா – தூங்க மறுக்கிறது
இன் – சுவையான

அடிசில் – சுடு சோறு [அடு – சூடேற்றிய, சில் – அரிசி]
பால் அமுது – பாயசம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வில்லிபுத்தூர், வராகத் தலமாக அறியப்பட்ட, காடுகள் நிறைந்த ஊராக விளங்கியது. அக்காட்டில் வசித்த வில்லி, கண்டன் என்ற வேடுவ சகோதரர்கள் வசித்து வந்தனர்.

ஒரு நாள் வழக்கமான வேட்டையின் போது கண்டன் துரத்திச் சென்ற புலி அவனைக் கொன்று தின்றது. இதையறியாத வில்லி, தன் தம்பியைத் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால் மிகவும் சோர்வடைந்து ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கிவிட்டான். வில்லியின் கனவில் தோன்றிய வராகப் பெருமாள், அவன் தம்பி கண்டனுக்கு நேர்ந்த நிலையை எடுத்துரைக்கிறார்.

கம்சனின் முந்தைய பிறவிதான் காலநேமி என்று கூறப்படுகிறது..அசுரனான காலநேமியை வதம் செய்யவே தான் இந்த ஊரில் வராகமாகப் பிறந்ததாக கூறினார் எம்பெருமான். பிறவிப் பெருங்கடலின் துயர் நீக்கும்  வடபத்திர சாயியாக எழுந்தருளி, தம் பக்தர்களைக் கரை சேர்க்க விரும்புவதாகக் கூறினார்.

வடம் என்றால் ஆலமரம்.. பத்ரம் என்றால் இலை என்று பொருள்.. பிரளய காலத்தில் ஆலிலை மேல் சயனித்திருப்பவனான கண்ணனே வில்லிபுத்தூரில் வசிக்கிறான்.

தன் முந்தைய வராக அவதாரத்தில் பூமித்தாயான தன்னை மீட்டது போல, இப்போது கோதையான தன்னை, துன்பக் கடலிலிருந்து மீட்கவே ஆலிலைக் கண்ணனாக அவதரித்து இருக்கிறான் என்று கோதை எண்ணினாள்.

வராகப் பெருமானின் விருப்பத்திற்கேற்ப, வில்லி என்ற வேடுவன் அமைத்த புதிய ஊர், அதாவது புத்தூர் என்பதால் வில்லிப்புத்தூர் என்று வழங்கப்பட்டது.

அன்னப் பறவை தமிழ் நாட்டில் காணப்படாத ஒன்றாகும். இமயம் போன்ற பனியிட வாழ் பறவையாகும்.
முன்காலங்களில் அங்கிருந்து இவற்றைக் கொண்டு வந்து அரண்மனையில் வளர்த்து வருவார்கள்.
அன்னத்திற்கு பாலும் நீரும் கலந்து வைத்தால் நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்தும்.
அது போல, அரசர்கள், நாட்டில் நிலவும் தீமைகளை நீக்கி, மக்களின் குறை தீர்த்து நன்மை செய்வார்கள்.

அன்னம் போலவே தானும் பாற்கடலிலிருந்து பூலோகம் அழைத்து வரப்பட்டவள் என்கிறாள் கோதை நாச்சியார். நம்மிடம் நல்லவைகளையே காணும், அன்னம் போன்ற அன்னையானவள்..

இத்தகைய அன்னங்கள் நிறைந்து காணப்படும் செழிப்பான ஊர் வில்லிபுத்தூர்..ராமனாய் அவதரித்தபோது சீதையான தன்னை மீட்க காடு மேடெல்லாம் தன் திருவடிகளால் நடந்த களைப்பு நீங்க, தற்போது வடபத்ர சாயியாக சயனித்திருக்கிறான்..தனக்காகக் காத்திருக்கிறான் என்று எண்ணிய கோதை, அப்பெருமைமிகு திருவடிகளைத் தரிசிக்க விரும்புகிறாள்.

கயல் மீன்கள் பொதுவாக நன்னீரிலே காணப்படுபவை.. அவை மற்ற மீன்களை உண்ணாது..வயல்வெளிகளில் காணப்படும் தீமை செய்யும் பூச்சிகளையும், பாசிகளையும் உண்டு வாழக்கூடியவை. அவை எப்போதும் புரண்டு கொண்டே இருக்கும்..துள்ளிக் குதிக்கும்..

கயல்மீன்களை ஒத்த தன் இரு கண்களும் அவை போலவே, தூங்காமல், எப்போதும் கண்ணனைத் தேடியவாறு புரண்டு கொண்டே இருப்பதாகக் கூறுகிறாள் கோதை நாச்சியார்..

ஆனால், பாற்கடலில் தன் மனைவியானாலும், பூவுலகில் பிறந்ததால், சாதாரண பெண்ணைப் போல கோதையும் பிரிவால் வாடுகிறாள். பசலை நோய் பீடித்துக் காணப் படுகிறாள்.

இது போன்ற பற்று எனும் நீர்மை நீக்கிய பின், தன்னிடம் சேர்க்க விரும்பி, மிகவும் தாமதப் படுத்துகிறான், வில்லிபுத்தூர் வாழும் கண்ணன்.

தான் மிகவும் பலவீனமடைந்து, பேசுவதற்குக் கூட நா எழும்பாத நிலையில், கண்ணனிடம் தனக்காகத் தூது செல்ல பச்சைக் கிளியைப் பழக்கப்படுத்தி இருந்தாள் ஆண்டாள்.. அக்கிளி இவள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே கண்ணனிடம் சென்று தெரிவிக்கும்.. அதற்கு உணவாக, இனிப்பு சேர்த்த [பாலில் இருக்கும் நீரால் சமைக்கப் பட்ட அரிசி] சுவையான பாலன்னத்தை தந்து பழக்கியிருந்தாள்…உணர்வையே உணவாக்கினாள்..

ஆனால் சோலையில் இருக்கும் குயிலோ தன் விருப்பத்திற்கு ஏற்ப உண்பதால், அதன் படிதான் பாடும்.. ஆகையால் தன் உணர்வை குயிலிடம் ஒவ்வொன்றாகத் தெரிவித்து, அதற்கேற்றார்போல் குயிலைக் கூவச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு தற்போது அதற்கும் வலுவில்லை.. ஆகையால் ஏற்கனவே தன் எண்ணம் என்னவென்று புரிந்த கிளியை குயிலுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறாள்..

கோதைக்கு எப்போதுமே வாமன-திருவிக்கிரம அவதாரங்களில் ஒரு ஈர்ப்பு.. ஏனெனில் அந்த அவதாரத்தில் தான் மேலுலகம், பூலோகம், பாதாளம் எல்லாவற்றையும் சமமாகக் கருதி அளந்தான் பரந்தாமன்..யாரும் மாறுவதற்காகக் காத்திருக்கவில்லை.. எந்த நிலையிலிருந்தாலும், எந்தத் தன்மையில் இருந்தாலும், எங்கு இருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டான்..

தன் அழகிய கிளியையும் அந்த உலகு அளந்தான் பெயர் சொல்லவே பழக்கப் படுத்தி இருந்தாள் கோதை நாச்சியார்..

ஆகையால் குயிலைக் கிளியோடு நட்பாகி, அதனிடமிருந்து கற்று, தான் இப்போதிருக்கும் இந்த நிலையிலேயே தன்னை மீட்க, புகழ் ஓங்கிய திருவடிகளைத் தரிசிக்க, உலகளந்த திருவிக்ரமனை வரச்சொல்லிக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்….

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

நாச்சியார் திருமொழி 45

garudan

நாச்சியார் திருமொழி -45 பாசுரம் 548

ஐந்தாம் திருமொழி பாடல்-4

என்பு உருகி, இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்,
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்..
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே..
பொன் புரை மேனிக்கு அருளக், கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய்

என்பு – எலும்பு

இன வேல் நெடுங்கண்கள் – பெண்ணினத்திற்கே உரித்தான, வேல் போன்ற, நீண்ட கண்கள்.

புக்கு – புகுந்து

பொன் புரை மேனி – பொன்னின் நிறத்தை ஒத்த மேனி

பல வித மலர்கள் கொண்ட சோலையில் பூக்கள் மலர்கின்றது. மொட்டுகளின் நறுமணம் காற்றை நிறைக்கிறது. செடிகளிலும் பூக்களிலும் பனித் துளிகள் நிறைந்து காணப் படுகின்றது. வனத்தை வளமாக்கும் பொறி வண்டுகள் இசைக்கின்றன. மரப் பொந்துகளில் குயில்கள் தங்கள் இணைகளுடன் கூடி மகிழ்கின்றன.

கோதை நாச்சியார், இவைகளில் எவற்றாலும் ஈர்க்கப்படாமல், தான் விரும்பியவரைக் காண இயலாமல், வருந்தி அழுது, கண்களில் கண்ணீர் வற்றி, வாடி இருந்தாள்.

பசலை என்பது உணவு,உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் கண்கள் குழி விழுந்து, உடல் இளைத்து, கருத்துப் போவது இயற்கைதான். இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர்.

பொதுவான நோய்களை, அதற்கான மருந்து  உட் கொண்டு, உறங்கிக் குணப்படுத்த முடியும். ஆனால் காதலரின் மேனி கருத்துப் போவது என்பது ஆற்ற முடியாத நோய். காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய். இந்நோய் பற்றி, காதலித்து, பிரிவுத்துயரை அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும்.

பல நாட்களாக உண்ணாமல் கண்ணனின் நினைவுகளையே சிந்தித்துக் radha-raniகொண்டிருந்ததனால், உடல் நலிந்து, எலும்புகள் உருகியது போல பலவீனமாக உணர்ந்தாள் ஆண்டாள் நாச்சியார். கண்கள் இமைக்காமல் கண்ணனைத் தேடியதால், கண்ணிமைகள் ஒன்றை ஒன்று பொருந்தாது, ஈரப்பசை இல்லாமல் போனது. தங்கம் போல ஒளி விடும் மங்கையான கோதையின் நிறம் மங்கி, கண்ணனைப் பிரிந்த காதல் நோயால் ஒளி குன்றியது.

அன்பு உடையவர்களைப் பிரிந்தால் வரும் நோயை குயிலும் அறியும் என்று அதையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்கிறாள்.. குயிலின் கருப்பு நிறம் பசலை நோயால்தான் காரணம் கற்பிக்கிறாள்…

உடலில் தோன்றும் வேறு எந்த நோய்களுக்கும் வெவ்வேறான மருந்துகள் இருக்கிறது.. ஆனால் காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்பதை,….

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”

என்று வள்ளுவர் கூறுகிறார்..

எதுவொன்றின் மீதான பற்றையும் விடுத்து, கண்ணனையே பரம் பொருளாக தியானித்து வழிபடும் போது, இறப்பும் பிறப்புமாகிய துன்பக் கடலிலிருந்து நம்மைக் கரை சேர்ப்பதாக கண்ணன் கீதையில் கூறியுள்ளான்.

அது போல தன் நோயும் மருந்தும் கண்ணனே என்று கூறுகிறாள் கோதை நாச்சியார். திருப்பாற்கடலில்,  கண்ணனோடு அவனின் நாயகியாக இன்பமாக இணைந்திருந்தாள்.. அவ்வாறான தன்னை, அவனைப் பிரிந்து, இப்புவியில் பிறந்து உழலும் துன்பக் கடலிலிருந்து தன்னைக் கரை சேர்க்கவும், தோணியாக அதே வைகுந்தன் தான் வரவேண்டும் என்கிறாள்.. அவனைப் பெற முடியாமல் மன உளைச்சலில் தவிப்பதாகக் கூறுகிறாள்..

சென்ற பாடலில் வில்லேந்தியவர்களுள் ராமனாவேன் என்று கண்ணன் கூறியதை நினைவு கூர்ந்த கோதை, இப்பாடலில் பறவைகளில் கருடனாவேன் என்பதைக் குறிப்பிடுகிறாள்..

பரம பதத்தில், தன்னலமில்லாத தொண்டு புரிபவர்களான, நித்ய சூரிகளில், கருடன் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறார்  பாற்கடலைக் கடைந்த போது திருமாலின் கட்டளைப்படி மந்தார மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன். யாருக்கும் அஞ்சாதவர். இவர் தன் அன்னையின் அடிமைத்தனம் நீக்க, பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை எடுத்துச் சென்றார். அவரை  தேவேந்திரனாலும் தடுக்கமுடியவில்லன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்கமடையச் செய்தார். இவரின் வீரத்தில் மகிழ்ச்சிகொண்ட திருமால் வெற்றிக்கு அறிகுறியாகத் தன் கொடியிலும் விளங்கச் செய்தார். அதனால்தான் கருடனைப் பார்த்தால் நல்ல சகுனம் என்பது வழக்கம்.

அது மட்டுமல்லாமல் கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், தொலைந்த பொருள் கிடைத்தல் போன்ற நம்பிக்கைகளும் உண்டு..

தன் பக்தர்களின் துயர் நீக்க உடனடியாக ஓடோடி வருவது கருட வாகனத்தில் தான்.. கண்ணனின் மனமறிந்து அதன்படி செயல் படுபவன், தன்னலம் கருதாக் கருடன்.. அவனைத் தன் கொடியில் இடம் பெறச் செய்து தன் தூய உள்ளத்தைக் காட்டிய புண்ணியவான் கண்ணன்.

அது மட்டுமன்றி பிறப்பு, இறப்பு மற்றும் இடையில் உண்டாகும் எத்துன்பங்களாலும் பாதிக்காத, புண்ணியம் செய்தவன்…

முடிவில்லாதவனும்,  அளவிடமுடியாதவனும், எல்லையற்றவனுமாகிய இறைவன் எனும் புண்ணியன்…

கோதைக்கு கொடி என்றாலே அது கருடக் கொடிதான்…

தற்போது பசலை நோயால் கருத்து காணப் படும் தன் அழகிய பொன் போன்ற மேனி, பழையபடி, தன் ஒளியைத் திரும்பப் பெற விரும்புகிறாள்.

தன்னுடைய நோய் தீர்க்கும் அமிர்தமான கண்ணனைத் தாங்கி வரும் கருடனை எதிர்நோக்குகிறாள்.. ஆகையால், பெரும் வெற்றியைத் தருபவனான கருடனைத் தன் கொடியில் கொண்ட கண்ணன் எனும் புண்ணியன் வருமாறு குயிலைக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்….

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_….

நாச்சியார் திருமொழி 44

ramaநாச்சியார் திருமொழி -44 பாசுரம் 547
ஐந்தாம் திருமொழி பாடல்-3

மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் 
      
இராவணன் மேல் சர-மாரி 
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த 
      
தலைவன் வர எங்கும் காணேன் 
போது அலர் காவிற் புதுமணம் நாறப் 
      
பொறி வண்டின் காமரம் கேட்டு உன் 
காதலியோடு உடன் வாழ் குயிலே என் 
      
கருமாணிக்கம் வரக் கூவாய் 

மாதலி – இந்திரனின் தேரோட்டி

கோல் –தேரை இழுக்கும் குதிரைகளை வழி நடத்தும் கழி

சரமாரி – அம்பு மழை  

போது – மலர் அரும்பு

அலர் – மலரும்

கா – சோலை

நாற – மணம் வீச

காமரம் – இசைப் பண் (ராகம்) 

இராமாயண யுத்த காண்டத்தில், பூமியில் நின்று ராமரும்,  ரதத்தில் இருந்து ராவணனும், கடுமையாகப் போரிட்டனர். இது சமமான போர் அல்ல என்று கருதிய தேவர்கள் தலைவன் தேவேந்திரன், மாதலி என்ற தன் தேரோட்டியை ராமனுக்கு உதவியாக அனுப்பி வைத்தான்.  தேவர்களுக்கு நன்மை தரக் கூடிய போருக்கு உதவும் விதமாக அனுப்பிய அந்த ரதம் உயர் வகை குதிரைகள் பூட்டப்பெற்று, பொன்னாலும், மதிப்பு வாய்ந்த பல்வகைக் கற்களாலும் அழகிய வேலைப்பாடுகள் செய்யப் பட்டு, ஆயிரக்கணக்கான மணிகள் ஒலித்திட, இளம் சூரியன் போல் ஒளிவீசி, அதன் உச்சியில் வெள்ளியிலான கொடியுடன் பேரழகுடன் கம்பீரமாகத் தோற்றமளித்தது.

உலக நன்மைக்காகவும், தீவினைகளை அழிக்கவும், நல்வினைகள் பெருகவும், மிகுந்த  துன்பத்துக்கு ஆட்பட்ட தேவரும், முனிவரும் நிம்மதி பெற, இராமபிரான் அந்தத் தேரின் மீது ஏறி போருக்குப் புறப்பட்டான்.

பெரும்பாலான நேரங்களில் இந்திரன் தன் செருக்கால், அவசர புத்தியால் போர் புரியும் பொழுது எல்லாம் அவன் தோற்கடிக்கப்படுவான். அதனால் இந்திர ரதத்தின் சாரதியான மாதலிக்கு, தேரைப் பின்புறம் செலுத்தியே பழகிவிட்டது.

ஆனால் இப்போது போர் புரிவது இராமன். அவன் தேவையின்றி போர் புரிய மாட்டான். அதுவும் தன்னால் இயன்ற அளவு, சமாதானத்திற்கு பல விதமாக முயன்ற பிறகு, தன் அன்பர்களை இழந்த பிறகு, தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களைக் காக்கும் பொருட்டு, இராவணனுடன் போர் புரிந்தான்.

பிறர் நன்மைக்காக, நேர்மையுடன் முன்னின்று, முனைப்புடன் போரிட்டதால், இராமனுக்கான மாதலியின் தேர் முன் சென்றது.

நேர்மையற்று இராவணன், கபட சன்யாசியாக வந்து, சீதையான தன்னைக் கவர்ந்து சென்றதால், வெகுண்ட ராமன், தன் வில்லிலிருந்து அம்புகளை மழை போலத் தொடுத்தான். அதில் இராவணனின் உயிர் போக்கும் விதமாக, உப தலைகளுடன் கூடிய, தாய் தலை உள்ளிட்ட பத்து தலைகளும் அறுந்து அறுந்து வீழ்ந்தன..    

பூவின் நிலைகள்:

முதலில் – அரும்பு,

பனியில் நனையும் போது- நனை

நனைந்து முத்தாகும் போது – முகைporivandu

 வெடிக்கத் தயாராக இருக்கும் போது-மொக்குள்

விரிந்து கொண்டிருக்கும் நிலையில்- போது

மணம் வீசத் தொடங்கும் போது –முகிழ்

மலர்ந்த பின்- மலர்

நன்றாக மலர்ந்த பின் மகரந்தம் பரவும் போது –அலர்

மலர்க்கூட்டம் – பொதும்பர்

வீழும் போது –வீ

உதிர்ந்த பூக்கள்-பொம்மல்

பழுப்பாய் வாடிய பின் – செம்மல்

அரும்புகள் மலர ஆரம்பிக்கும் போது அதன் முதல் மணம், மிகவும் அற்புதமாக இருக்கும்.. அந்த நறுமணம் வீசும் மலர்ச் சோலையில் பொறி வண்டுகள் ரீங்கரிக்கும்..

பொறி வண்டு என்பது நன்மை பயக்கும் வண்டு.. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கறுப்புப் புள்ளிகளுடன் காணப்படும்.. அது செடிகளை அழிக்கும் பூச்சிகளைத் தின்றுவிடும்.. ஆகையால் சோலையின் வளத்திற்கு எந்த பாதிப்பும் வராது..

தீமைகளை அழித்து நன்மை செய்வதால் பொறி வண்டின்  ரீங்காரத்தைக் கூட காமரம் என்று ஒரு வித இசைப் பண்ணாகப் பெருமை செய்கிறாள் ஆண்டாள் நாச்சியார்..

இத்தனை அழகு வாய்ந்த சோலையில், இவை எதையும் ரசிக்க முடியாமல், கண்ணனைப் பிரிந்த துயரால்  தான் தனித்திருக்க, தன் சோகம் தெரியாமல், தன் காதலியுடன் களித்திருக்கும் குயிலைப் பொறாமையுடன் பார்க்கிறாள் கோதை நாச்சியார்.. 

இலங்கையும் இது போன்ற சோலைகள் நிரம்பிய வெகு அழகான ஊர்… அங்கும் இதுபோல்தான் தன் தலைவனைப் பிரிந்து, தனித்து வாடினாள் சீதை அன்னை..

ஆகையால் இச்சோலையும் ஆண்டாளுக்கு இலங்கை அசோக வனத்தையே நினைவூட்டுகிறது..முன்பு சீதையான தன்னை மீட்கும் பொருட்டு, ராமன் வந்தது போல, தற்போது கண்ணன் வருவானென்று நினைத்திருக்கிறாள்.. ஆனால் எங்கும் தென்படவில்லை.. என்று மனம் கலங்கித் தேடுகிறாள்..

ராமனாவது, நிதானமாக,  நேர்மையின் இலக்கணமாக வகுத்த விதிகளைப் பின்பற்றி அதன்படிதான் செயல் படுவான். ஆனால் கண்ணனோ கடவுளரிலும் மாணிக்கம் போன்றவன்…

மண்ணிலிருந்து கிடைக்கும் மாணிக்கம் தன் உறுதிக்கும், அழகுக்கும் பெயர் பெற்றது..  

அது போலவே தன் பக்தர்கள் நலன் காப்பதில் மிகுந்த மன உறுதி கொண்டவன் கண்ணன். அன்பர்களின் ஆபத்து நீக்கும் அவசரம் கருதி , எதையும் செய்து, அச்செயலை நியாயப் படுத்திவிடுவான்..புது இலக்கணம் படைப்பான்..  

கண்ணனைப் பிரிந்து வாடும், கோதையான தன்னை மீட்க, கரு மாணிக்கம் போல நிறமும் குணமும் கொண்ட, தன் கணவனை வருமாறு குயிலைக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

நாச்சியார் திருமொழி 43

panchajanyaநாச்சியார் திருமொழி -43 பாசுரம் 546
ஐந்தாம் திருமொழி பாடல்-2

வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட 
      
விமலன் எனக்கு உருக் காட்டான் 
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் 
      
உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும் 
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் 
      
களித்து இசை பாடும் குயிலே 
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் 
      
வேங்கடவன் வரக் கூவாய்

விளிசங்கு – அழைக்கும் சங்கு

 இடங்கை – இடக்கை

 விமலன் – தூயவன்

 உருக்காட்டான் – உருவத்தைக் காண்பிக்க மாட்டான்

 நைவித்து – நோகச் செய்து

உயிர்ப்பு எய்து – உயிர் பெற்று [தன் நினைவு திரும்பி ]

 கூத்தாட்டுக் காணும் – வேடிக்கை பார்ப்பான்

கள் அவிழ் – தேன் ததும்பும்

 கோதி – வருடி

 மிழற்றுதல் – குயிலின் கொஞ்சல் கலந்த கூவும் ஒலி.

வெண்மை நிறம் தூய்மையைக் குறிக்கும்..  நன்மை தரும் சக்திகளை வரவழைக்கவும் தீய சக்திகளை விரட்டவும் வெண்மையான சங்கை ஒலிக்கச் செய்வது வழக்கம்..

ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஒரு இடம்புரிச் சங்கும், ஆயிரம் இடம்புரிச் சங்குகள் இருக்குமிடத்தில் ஒரு வலம்புரிச் சங்கும், ஆயிரம் வலம்புரிச் சங்குகள் இருக்குமிடத்தில் ஒரு சலஞ்சலமும், ஆயிரம் சலஞ்சலங்கள் கூடிய இடத்தில் ஒரு பாஞ்ச சன்யமும் இருக்கும் என கடல் ஆராய்ச்சி கூறுகிறது. அந்தப் பாஞ்ச சன்யம் தான் கண்ணனின் இடது கையில் இருக்கும் அரிதான சங்கு… 

உரத்து முழங்கிய சங்கொலியால் தன் தேவையின் தீவிரத்தைக் கண்ணன் காட்டியது போல, குயிலின் உரத்த கூவுதலால், தான் கண்ணனுடன் கூட வேண்டிய அவசரத்தை/அவசியத்தைக் கூறுகிறாள்..    

தன் உள்ளத்தில் புகுவதும் பின்பு தன் சேட்டைகளால் மனதை நோகச் செய்தும் வேடிக்கை செய்கிறான் கண்ணன்.

இவனோடு மல்லுக் கட்ட முடியாது என்று ஒதுங்க நினைக்கும்போது மறுபடி வந்து ஆசை காட்டுகிறான். இவனுடனான வாழ்வு தினமும் செத்துப் பிழைப்பது போல உள்ளது..                 

 கண்ணன், தன் பக்தர்களின் நலன் கருதியே அனைத்துச் செயல்களையும் செய்கிறான். குற்றமற்றவன் அவன்..புனிதன்.. தன் போலவே, தூய உள்ளத்தோடு பலனை எதிர்பாராது உலக நலனுக்காக சிந்தித்து, அதன் பொருட்டு உழைப்பவர்களை, காண்பதற்கு அரிதானவர்களை அழைக்கவே சங்கை முழங்குகிறான்..

ஆகையால், என்னதான் தன்னை நோகச் செய்தாலும் தன் அன்புக்கு உரியவன் அவன்.. தன் கணவன்..தன்னலமற்றவன், தூயவன் என்று உருகுகிறாள் கோதை..

பொதுவாகவே பிறர் துயர் நீக்கும் எண்ணங்களை உடையவர்களைக் காண்பது அரிது.. கண்ணனோ உலக உயிர்களின் துயர் நீக்குபவன்.. அவனைக் காண்பது எளிதல்ல.. அவன் விரும்பும் செயல்களைச் செய்து அவனின் கவனைத்தை ஈர்க்க, முயற்சி வேண்டுமானால் செய்யலாம்..அதைத்தான் குயிலின் மூலம் கோதை செய்கிறாள்.

தான் இவ்வாறு கவலையில் ஆழ்ந்திருக்க, குயிலோ அங்கிருந்த செண்பக மலரின் தேனை அருந்திக்கொண்டு இருக்கிறது.. போதாதற்கு, மிகுந்த ரசனையுடன் அதிலிலுள்ள தேனின் கடைசிச் சொட்டு வரை அருந்தும் பொருட்டு, அம்மலரின் ஒவ்வொரு இதழையும் தன் நாவால் வருடிக் கொண்டிருக்கிறது..

இவ்வாறு ரசித்து ருசித்து உண்ட தேனின் மயக்கத்தால், தன் அருகில் வந்து, அழகாகக் கூவுவதாக நினைத்து, தன் இணையுடன் முன்பு பேசியதை எல்லாம், கொஞ்சிக் கொஞ்சி உளறிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தன் சுகம் பற்றியே நினைத்துக்கொண்டு கூவுவது பெரும் பாவம்..

வேங்கடம் என்பது தீ வினைகளைப் போக்கும் இடமாகும். கடம் என்பது நம் வினைகள்.. பிறவிக் கடன்கள்.. அதைப் பொசுக்கும் வெம்மைத் தன்மை கொண்டது வேங்கடம்.

தன் அடியவர்களின் பாவங்கள் தீர்க்கும் பொருட்டு, திருமகளான தன்னைப் பிரிந்து, வேங்கடமலையில் தனித்து இருக்கிறான் கண்ணன். தன்னைப் பிரிந்த, வெப்பத்தில் தவிக்கும், தன் துணைவனை, தன்னைக் காணச் செய்வதின் மூலம்,அவனையும் குளிர்வித்து, தன்னையும்  குளிர்விக்கச் சொல்கிறாள்..அதன் மூலம் குயிலின் பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சொல்கிறாள்.. 

நம் வினை தீர்க்க இம் மண்ணில் பிறவி எடுத்து, தன் மாதவனைப் பிரிந்தவள், மீண்டும் அவனைச் சேர வேங்கடவனை வரச் சொல்கிறாள்.

கண்ணனின் நாமம் ஒன்றையே கூவி, தன் இருப்பிடம் தெரிவித்து, எங்கோ மலை மேல் தனியாகக்  காத்திருக்கும், தன் வேங்கடவனைத், தன்னைச் சேர வருமாறு குயிலைக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்…..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_….

நாச்சியார் திருமொழி 42

 

 நாச்சியார் திருமொழி -42 பாசுரம் 545
ஐந்தாம் திருமொழி பாடல்-1andal

“மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
      
வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் 
      
சங்கு இழக்கும் வழக்கு உண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் 
      
பொதும்பினில் வாழும் குயிலே 
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் 
      
பவள வாயன் வரக் கூவாய்”

மன்னு – மங்காத, நிலைத்த 

மைந்தன் – வலு உள்ளவன், வீரம் மிக்கவன்  

உகந்தது – விரும்பியது

சங்கு – கைவளை

பொதும்பு – பொந்து, சோலை  

பன்னுதல் – பாடுதல்

கண்ணனின் பிரிவால் வாடும் கோதை நாச்சியார், இதுவரை, தன் கண்ணன் தன்னிடம் வருவானா என்று மணலில் கூடலிழைத்துப் பார்த்து, மனதைத் தேற்றிக் கொண்டாள். குறி பார்த்தால் மட்டும் போதாதென நினைத்து குழம்பி இருந்தவளுக்கு, குயிலின் ஓசை கேட்கிறது. அதில் கவனம் கொண்டவளுக்குத் தற்போது புதிதாய் ஒரு சிந்தனை..

இத்தனை நாளும் பலவிதமாகக் கண்ணனிடம் வேண்டியும் வராததால் சோர்ந்து போனதால் மிகவும் மெலிந்து போனாள்.. அதனால் அவளின் கைவளைகள் கூட கழன்று விழும் நிலையில் உள்ளது.. இனி கூடலிழைத்துப் பார்க்கவும் கைகளில் வலுவில்லை.. வாயால் உரக்கப் பாடி அழைக்கலாம் என்றாலோ, உடல் சோர்ந்ததால், குரலும் எழும்பவில்லை.

குயிலும் தன் துணையைத் தேடித்தான் உரக்கக் கூவுகிறது..அழகாகக் கூவுவதோ ஆண் குயில்..பெண் இணைக்காக, ஆண் இனம் தன் வசப்படுத்தும் முயற்சியாக, பல் வேறு அழகியல்களை செயல் படுத்துவது உலக இயல்பு..   

ஆனால் இங்கு பெண்ணான தான், ஏங்கும் நிலையில் இருந்தாலும்..அதற்கானவன் சாதாரணமானவன் இல்லை என்பதால் கோதைக்குப் பெருமைதான். அதுவும் ஒரு ஆண் குயிலிடம் கூவி அழைக்கச் சொல்வதில் அவளுக்குக் கர்வம்தான்..

ஆகையால்,தன் போலவே இணையைச் சேரத்துடிக்கும் ஒரே இனமென்று வகைப்படுத்தி, அந்தக் குயிலையே தன் சார்பாக அந்தப் பரந்தாமனைக் கூவி அழைக்கச் சொன்னால் என்ன என்று கோதைக்குத்  தோன்றியதால் உருவானது இந்த குயில் பத்து பாடல்கள்..

திருமகளான தன்னைத், தன் திரு மார்பில் கொண்டவன் என்பதாலேயே மாதவன் என்ற பெயர் கொண்டவன் அந்தப் பரந்தாமன். அந்த நிலையில் இருந்து என்றும் மாறாத பெருமையுடையவன் ஆனதால், மங்காத பெரும் புகழை அடைந்தவன்..

தான் நேர்மையானவன் என்பதை நிருபிக்க உதவிய, அரிதும் பெரிதுமான சமந்தக மணியின் நீல நிறத்தை உடையவன்..

இவ்வுலகில், நிரந்தரமாக மணிமுடி சூடும் தகுதியுடைய, வலிமையுடைய ஒரே அரசன்…

இப்படிப்பட்ட சிறப்புகளை உடையவனைத் தான், தான் விரும்புகிறேன் என்று குயிலிடம் தன் துணைவனின் பெருமைகளைப் பட்டியலிடுகிறாள்..

அப்படிப்பட்டவன், கவலையால், தன் கைவளைகள் கழன்று விழும் அளவிற்குத், தன்னை வருத்துவது நியாயமா என்று கேட்கிறாள்…  

புன்னை என்பது ஒரு வகை மரம்.. பளபளப்பான கரும் பச்சை நிறமுடைய இலைகளைக் கொண்டது..வெண்ணிறமான பூவில் மஞ்சள் நிற மகரந்தங்களை உடையது..

செருந்தி என்பது ஒரு வகை கோரைப் புல்.. நீண்டு வளரும் தன்மையுடையது..வாளைப் போல பூக்கள் கொத்தாகப் பூப்பதால் வாட் கோரை எனப்படும்.. ,

குருக்கத்தி என்பது ஒரு வகை மலர்க் கொடி…மாதவிப்பூ என்றும் வசந்த மல்லிகை என்றும் அழைக்கப் படுகிறது..

ஞாழல் என்பது ஒரு செடி வகைத் தாவரம்.. புலி நகக் கொன்றை என்றும் கூறப்படுகிறது.. அதன் மலர், புலி நகம் போன்ற ஐந்து இதழ்களை உடையது.. நடுவில் மகரந்தம் செந்நிறத்தில் காணப்படும்..குங்குமப்பூ என்றும் கூறுகிறார்கள்..         

இப்பூக்களைத்தான் அந்நாளில் பெண்கள் விளையாடி மகிழ்வர். தம் மனம் கவர்ந்தவர்களுக்கும் மாலையாகச் சூட்டுவர்..

இவை அனைத்துமே மணல் பாங்கான இடங்களில் வளர்பவை..அதுவும் நீரில் அடித்து வரப்பட்டு தானாக வளரும் தன்மை உடையவை ஆகும்..

கோதைக்கு,இத்தாவரங்களின் கரும் பச்சை நிற இலைகள் கண்ணனின் நிறத்தையும், அதன் பூக்கள், கண்ணனின் இதழ்களையும், அதில் அமர்ந்து கூவும் குயிலின் ஓசை, கண்ணனின் குழலோசையும் நினைவு படுத்துகிறது..

குயில்கள், தனக்கென கூடு கட்டாமல், காக்கையின் கூடுகளில் முட்டையிட்டு விட்டு, என்றும் தனிமையிலேயே வாழும்..பொதுவாகக் கூச்சமடையும் தன்மையுள்ள குயில்கள், மேற்கூறிய தாவரங்களின் பொந்துகளில் தான் மறைந்து வாழும்..     .  

தான் இந்த மணல் படுகையில், கண்ணனை நினைத்து, வெகு காலமாக மணல் வீடு கட்டிக் கொண்டும், கூடல் இழைத்துக் கொண்டும், பூக்களை குவித்து அவன் வருகைக்காக ஏங்கிக் காத்திருப்பதை அந்த குயிலும் நன்றாக அறியும்..

ஆதலால், இனி எந்நேரமும், தன் நாதனான, பவளம் போன்ற இதழ்களை உடைய, கண்ணனின் நாமங்களையே, அவன் காதில் விழுமாறு உரக்கப் பாடி, அவன் கவனம் ஈர்த்து, தன் நிலைமையைச் சொல்லி விரைந்து வருமாறு குயிலைக் கூவச்சொல்கிறாள் கோதை நாச்சியார்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …._/\_….