நாச்சியார் திருமொழி 48

vishnu 2

நாச்சியார் திருமொழி -48 பாசுரம் 551

ஐந்தாம் திருமொழி பாடல்-7

 

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்

      புணர்வது ஓர் ஆசையினால் என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து

      ஆவியை ஆகுலம் செய்யும்;

அம் குயிலே! உனக்கு என்ன மறைந்து உறைவு?

      ஆழியும் சங்கும் ஒண் தண்டும்

தங்கிய கையவனை வரக் கூவில், நீ

      சாலத் தருமம் பெறுதி

ஆகுலம் – துன்பம்

அம் குயில் – அழகிய குயில்

ஆழி – சக்கரம்

ஒண் தண்டு – வலிமையான கதை

சாலத் தருமம் பெறுதி  – அதிகப்  புண்ணியம் பெறுவாய்

ஊழிக்கால முடிவில் அண்ட சராசரங்களும் ஒடுங்கிய நிலைக்கு வருவதை பாற் vishnuகடல் விளக்குகிறது. உலகனைத்தையும் காக்க பாற்கடலில் திருமால் பாம்பணையில் அறிதுயில் எனப்படும் உறங்காநிலை கொண்டுள்ளார். திருமாலின் இந்தநிலை பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் தன்மையை உணர்த்துகிறது..

அந்நாளிலிருந்தே ஆழ்வார்களும் கவிஞர்களும் பெருங்கடலை நம் உள் மனமாக உருவகப் படுத்தினார்கள்.

வேதங்களும், ஆழ்மனதை, இருள் நிறைந்த பெருங்கடல் என்றும், மேலோட்டமான மனதை, ஒளி நிறைந்த பெருங்கடல் என்றும் வருணிக்கிறது. மேலும் கீழுமாக இருக்கும் நீர்ப் பெருந்திரள்கள் என்கிறது..

ஆழ் மனதின் அடி ஆழங்களிலிருந்து அமிர்தமென இனிமையான பேரலைகள் எழும்பும். மனம் தன் ஒளி மிகுந்து இருக்கும் தருணங்களில், இப் பேரலைகளின் திவலைகளை ருசிக்கும்.

அதாவது நம் மனம் எப்போதும் தெளிவாக இருந்தால் வாழ்க்கை ருசிக்கும்..

நன்மையும் தீமையும் இணைந்து, இறவாமை எனும் அமிர்தம் பெற, நம் அகக்கடலைக் கடையும் அந்த பாற்கடல் தத்துவம், ஒரு ஆதார உருவகமாக விளங்குகிறது.

சந்திரன் கடலலைகளை மேலெழச் செய்கிறான்..காற்றினால் கடலைக் கலக்குகிறான்.

நாராயணன் என்றால், நீரில் சயனித்திருப்பவன் என்று மட்டுமல்ல  தன்னிடத்திலிருந்து தோன்றிய உலகில் வீற்றிருப்பவன் என்றும் பொருள்..சந்திரனிலும் வீற்றிருந்து கோதையைக் காண்கிறான் என்று நினைக்கிறாள்..

அது போல, ஆண்டாளுக்குத், தான், பரந்தாமனின் துணையான அலைமகள் எனும் ஆழ்மன நினைவானது, சந்திரனாய், கண்ணன் தன் முன் தோன்றியபோது, மேலெழும்பியது. அதன் வெளிப்பாடாகவே, அலைகள் ஆர்ப்பரிப்பது போலத், தன் அவயங்கள் ஆர்ப்பரித்து எழுந்தன என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்..

அங்கே பாற்கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் போது அவற்றை அமைதியுறச் செய்ய அதன் மேல் பரந்தாமன் பள்ளி கொண்டதுபோல, தன்னுள் ஆர்ப்பரிக்கும் அவனின் நினைவுகளை அமைதியுறச் செய்ய அவனே வந்து அணைப்பான் என்று எண்ணியிருந்த ஆண்டாளுக்கு, கண்ணன் வரத் தாமதமானதால், ஆர்ப்பரிக்கும் அவயங்களால், மிகுந்த துன்பமடைகிறாள்.. உயிர் போகும் வலி என்பது போல அவதியுறுகிறாள்..

தான் யாரென்று தெளிவாக உணர்ந்ததால் தான், கோதை நாச்சியார், தன் பழைய நிலையை அடைந்து, கண்ணனைப் பிரியாத நிலை பெற விரும்புகிறாள்..

ஆகையால் தான், நன்மை தீமை என கண்ணனுடன் ஊடலையும் கூடலையும் புரிகிறாள்.. அவைகளை இணைத்து, தன் மனதால் கடைந்த இப்பாசுரங்கள் மூலம் நமக்கும் அமிர்தம் தந்து அவளும் அமிர்தமான கண்ணனை அடைய விரும்புகிறாள்..

விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவன் எனப் பொருள் கூறுவர்.

அழகிய குயிலானது கோதையின் வேண்டுகோளுக்கிணங்க எத்தனையோ முறை கூவியும் கண்ணன் வந்த பாடில்லை. ஆகையால், இவள் கூறுவது எல்லாம் உண்மைதானா..தான் பைத்தியக்காரத்தனமாக, தன் இணையுடன் கூடுவதை விட்டுவிட்டு, இவளின் தத்துவங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்தது.

அதனால் கோதையிடம் இருந்து தப்புவதற்காக மறைந்து கொண்டிருக்கிறது.. எங்கும் நிறைந்தவனான கண்ணன் அதையும் அறிவான் என்கிறாள் ஆண்டாள்..

தருமம் என்ற சொல்லால், சரியான செயல்களைச் செய்வதையோ  அல்லது சரியான பாதையில் பயணிப்பதையோ குறிக்கிறோம். உலகத்திலுள்ள மனிதர்கள் மட்டுமல்லாமல், எந்த வித பிடிப்பும் இல்லாத வான் வெளியில்,  அண்ட சராசரங்களும், ஒரு ஒழுங்கில் இயங்குவதையும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளாகவே உணர்கிறோம்.

சனாதன தருமம் எனும், வாழ்க்கை வாழத் தேவையான, சரியான வழிமுறைகளைக் கொண்டது, இந்து சமயம்.

“எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்கின்றன வேதங்கள். தனி மனித தருமம், சமூக தருமம், தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்கான தருமம் என்று நான்கு வித தருமங்கள் உள்ளது.

தனி மனித தருமம் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் தினம்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும்…

புற உறுப்புகளையும், அக உறுப்புகளையும் அடக்கி ஆளுதல்..

எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்..

மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்..

கோபப்படாதிருத்தல்..

மனநிறைவு காணுதல்..

தன்னலத்தைத் துறத்தல்..

புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்..

பேராசைப்படாதிருத்தல்..

பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்.

அடக்கத்துடன் இருத்தல்.

மென்மையுடன் இருத்தல்.

கருணையுடன் இருத்தல்.

மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி பெறுதல்..

மன்னிக்கும் தன்மை கொண்டிருத்தல்..

உடலையும் மனதையும் தூய்மையாக வைத்திருத்தல்..

தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்..

தனி மனித தருமங்களை கடைப்பிடித்தவர்கள் இணையும் போது அது உயர்ந்த சமூகம் ஆகிறது . அப்படிப்பட்ட ஒரு சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய தருமங்கள்

  1. அன்பு
  2. ஈகை
  3. வாய்மை
  4. விருந்தோம்பல்
  5. கீழ்த்தரமான உணர்வுகளை அடக்குதல்.
  6. பிறர்க்குத் துன்பத்தை தரும் உண்மையைத் தவிர்த்தல்.

நாடு சிறக்க வேண்டுமானால், தனி நபர்களும், சமூகமும், எதையும் எதிர் பார்க்காமல்/ தான் பிறருக்குச் செய்த நன்மைகளையும் நினைத்துக்கொண்டிராமல் தியாக உள்ளத்துடன் இருக்க வேண்டும். அதுவே தேசிய தருமம் ஆகும்.

மனித இனம் சிறப்புற, வெவ்வேறு எண்ணங்கள் கொண்ட தனி நபர்களும், பல தரப்பட்ட சமூகங்களும், மற்றும் பல்வேறு  நாடுகளும் ஒன்றிணைந்து, தேவைக்கேற்ப, மேற்கூறிய தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

அது போல குயிலுக்கான தருமமாக, தான் இவ்வாறு வேதனையில் வாடும் போது, ஓடி ஒளிந்து கொள்ளாமல், அவளுக்கு உதவ வேண்டும் என்கிறாள்..

திருமாலின் நான்கு திருக்கரங்களும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவைகளை ஏந்தியிருக்கின்றன.

சங்கை ஏந்திய கை. இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது. அவரிடமிருந்தே நீர், நிலம், தீ, ஆகாசம், காற்று ஆகிய ஐம்பூதங்களும்  தோன்றின என்பதைக் குறிக்கின்றது.

மற்றொரு கையில் உள்ள சக்கரம், அறம் செய்பவர்களைக் காத்தும், கேடு செய்பவர்களைத் தண்டித்தும், தன் பணியைச் செவ்வனே செய்கிறது.

மற்ற இரண்டு கைகளிலுள்ள கதையானது முன்னேற்றம் தரும், வலிமையான அறிவையும், தாமரையானது அருளையும் தருகின்றன.

இவ்வாறு தன்னைத் தீண்டிய ஐம்புலன்களையும் தன் சங்கொலியால் விரட்டியடித்து, தனக்கு கேடு செய்யும் புலன்களைத் தன் சக்கரத்தால் தண்டித்து, தன் புலன்களுக்கு, கண்ணனை அடையும் வலிமையான அறிவைத் தரும் கதை உடையவனை, தன்னிடம் இணையக் கூடிய அருகதை உடையவனை, வரக் கூவுமாறு குயிலை வேண்டுகிறாள் கோதை..

தருமம் என்பதற்கு, கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள்களும் உண்டு. பொதுவாகக்  கொடையாளர்களும், யாசிப்பவர்களும் பயன்படுத்தும் சொல்லாக விளங்குகிறது.

இங்கு மேலோட்டமாக, கண்ணனை வரச் சொல்லி கூவுமாறு   யாசிப்பவளாகத் தோன்றினாலும், தன் கடமை மறந்து ஓடி ஒளிந்த அதன் பணியை நினைவுபடுத்தி, கண்ணனைக் காணும் பேற்றை குயிலுக்கும் கொடுக்க நினைக்கும் கொடையாளியாகத்தான் திகழ்கிறார் கோதை நாச்சியார்..

குயிலை, தனக்கு உதவுவதன் மூலம் அதிகப்  புண்ணியம் பெற்று, அதன் உடனடி பலனாக கண்ணனைக் காணும் பேற்றினை பெரும் பொருட்டே, அவனை வரக் கூவுமாறு சொல்கிறாள்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s