நாச்சியார் திருமொழி 47

நாச்சியார் திருமொழி -47 பாசுரம் 550

ஐந்தாம் திருமொழி பாடல்-6vishnu

எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் 
இருடீகேசன் வலி செய்ய 
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் 
முலையும் அழகு அழிந்தேன் நான் 
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை 
கொள்ளும் இளங் குயிலே என் 
தத்துவனை வரக் கூகிற்றியாகில் 
தலை அல்லால் கைம்மாறு இலேனே   

அமரர் – தேவர்கள்

இருடீ கேசன் – ரிஷி கேசன் – முனிவர்களின் தலைவன்

முத்து அன்ன – முத்தைப் போன்ற

வெண் முறுவல் – வெள்ளையான [பற்கள் தெரியும்படியான ] சிரிப்பு

கொத்து அலர் – கொத்துக் கொத்தாக மலர்கள்

காவில்  – சோலையில்

மணித்தடம் – அழகிய இடம்

கண் படை – நித்திரை [கண் உறக்கம்]

கூகிற்றியாகில் – கூவுவாயானால்

வேத வியாசரின் மகனாக சுகர் பிறந்தார்.. அவருக்கு பிரம்மோபதேசம் செய்வித்தவுடன் மகா ஞானியாய் விளங்கினார்..நாரதரால் மேலும் ஞானோபதேசம் செய்விக்கப்பட்டார்.

முழுஞானம் பெற்று சுகப்பிரம்மம் என்று அழைக்கப்பட்டவர், ஒரு நாள் தந்தையைப் பிரிந்து தவத்திற்குச் சென்றார். இவரின் பிரிவால் வாடிய வியாசர், காட்டிற்குள், மகனே!மகனே! என்று அழைத்தபடி சென்றாராம். அங்கிருந்த தாவரங்கள் அனைத்தும், ஏன்? ஏன்? என்று பதில் கூறியதாம். சுகப்பிரம்மமானவர் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறார் என்று உணர்ந்தார் வியாசர்.

தந்தையை விடவும் தவத்தில் சிறந்தவரான சுகப்பிரம்மம், மகரிஷியான சனகரிடமும் ஞான உபதேசம் பெற்றார்.

ஒருமுறை வியாசரும், சுகரும் தேவப் பெண்கள் நீராடும் நதிவழியே நடந்து சென்றனர்.  முன்னால் சென்ற சுகப் பிரம்மத்தை கண்டு அச்சமின்றி நீராடிய தேவப்பெண்கள், பின்னால் வந்த வியாசரைக் கண்டு வெட்கமுற்று ஆடைகளால் உடலை மறைத்தனர்.

தன் இளம் மைந்தனைக் கண்டு இயல்பாகக் குளித்த பெண்கள், கிழவனான தன்னைக் கண்டு பதற்றமடைவது ஏனென்று புரியாமல் வியந்த வியாசர் அவர்களிடம் காரணம் கேட்டார்.

சுகப் பிரம்மத்தின் கண்களுக்கு, அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுவதால், எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார்.. ஆனால் வியாசருக்கு,  ஆண், பெண் என்னும் வேறுபாடுகள் தெரிகின்றன. அதனால் தான் தாங்கள் வியாசரைக் கண்டவுடன் வெட்கமுற்றதாக தேவப் பெண்கள் கூறினர்.

அனைத்திலும் பிரம்மத்தைக் காணும் பக்குவம் சுகமகரிஷிக்கு இருந்தது.

இதனால் தான் ஆண்டாள் சுகப் பிரம்மரை  கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பினாள்.  தூது சென்று வந்த கிளியின் வேண்டுகோளால் தான், ஆண்டாளின் இடது கையில் சுகப் பிரம்மமான கிளி இடம் பெற்றது.

உலகின் எத்திசையிலும் உள்ள தேவர்களும் கடவுளுக்கு நிகரான சக்தி படைத்தவர்கள்..அப்படிப்பட்டவர்களே  விரும்பிப் பணியும் அன்பை உடையவன் பரம்பொருளான இறைவன்.. சுகப் பிரம்மம் போன்ற பல முனிவர்களின் அன்புக்கு உரியவன்..அவர்களின் தலைவன்..

எந்த அறிவால் ஒருவன் கண்டு, கேட்டு, முகர்ந்து, பேசி, ருசித்து உணர்கிறானோ அதை பிரக்ஞானம் எனவும் அந்த அறிவுதான் தேவர்கள் முதல் அனைத்து உயிர்களிலும் உள்ளது என்கிறது ரிக் வேதம் [பிரக்ஞானம் பிரம்ம]

எங்கும் நிறைந்த பரம்பொருளையே பிரம்மம் என்ற சொல்லால் அழைக்கிறோம். அறிவின் இடமாகிய  நம் உடலிலும் அதன் சாட்சியாகத் தான் இருப்பதை விளக்கும் விதமாக ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்கிறது யசூர் வேதம்.

பெயரோ உருவமோ இன்றி, அனைத்துமே ஒன்றாக, படைப்புக்கு முன்பே இருந்த, இப்பொழுதும் அப்படியே இருக்கின்ற, ‘அது’ என்று பொருள் படைத்தது  ‘தத்’.

தத் என்ற சொல்லின் மேலோட்டமான பொருளாக உலகை ஆளும் கடவுளைக் குறித்தாலும் உயிருள்ளவைகளிலும் உயிரற்றவைகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் பிரம்மம் என்பதே உட்பொருளாகும்.

நம்முடைய உடலுக்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்டதாய், நம்முள் இருக்கும் உண்மைப்பொருள், த்வம் எனப்படும்.

த்வம் என்ற சொல்லின் மேலோட்டமான பொருளாக ஐம்பூதங்களாலான மனதும், உடலும், அதன் புலன்களும் என்று கூறப்பட்டாலும்,  இவைகளுக்கு அப்பாற்பட்ட உயிர் என்பதே உண்மை.

‘தத்’ எனும் சொல்லால் குறிக்கப்படுவதும் ‘த்வம்’ என்னும் சொல்லால் குறிக்கப்படுவதும் ஒன்றே என்று உணர்த்த, ‘தத் த்வம் அஸி’ என்கிறது சாம வேதம்.

தனக்குத்தானே, யாரும் அறிவுறுத்தாமலே, அனைத்தின் உள் உறைபவனாக விளங்கும் ஆத்மாவானது, ‘நான்’ என்ற அகந்தையின் ஆதாரம்.

இந்த ஆத்மாவும், உலகம் யாவிலும் நிறைந்துள்ள பிரம்மமும் ஒன்றே என்ற தத்துவத்தை, ‘அயம் ஆத்மா பிரம்ம’ என்பதின் மூலம் உணர்த்துகிறது அதர்வண வேதம்.

முன்பு தான் மேலுலகில் இருந்தபோது, இவை எல்லாம் உணர்ந்து, எப்போதும் முத்துபோன்ற தன் பற்கள் தெரியும்படி வாய் கொள்ளாத சிரிப்புடன், இளமைப் பூரிப்புடன், துடிப்பாகச் செயல்பட்டவள், தற்போது பூவுலகில் பிறந்து, இவை எல்லாம் மறந்து, கண்ணனைக் காணாத துன்பத்தால், சிரிப்பு என்பதையே மறந்து, முற்றிலும் அழகிழந்து விட்டதாகக் கூறுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

இதை எல்லாம் அறிந்த கண்ணபிரானும், தன் மீது இரக்கம் கொள்ளாமல், தன்னுடன் சேர்த்துக் கொள்ளாமல், மஞ்சள் பட்டாடையும், மலர் மாலையும் அணிந்து, புன்முறுவலுடன் பேரழகனாக, அவ்வப்போது தன் முன் தோன்றிப், பின் மறைந்து தனக்கு மிகவும் துன்பம் தருகிறான் என்கிறாள் கோதை நாச்சியார்..

தேவர்கள் சூழ பாற்கடலில் துயிலும் பரந்தாமனைப் போலவே, கொத்துக் கொத்தாக மலர்கள் நிறைந்துள்ள சோலையில் அழகான இடத்தில் கண்ணுறங்குகிறதாம் குயில்..

அதுவும் இளம் குயிலாக இருப்பதால் மேற்கூறிய தத்துவங்களும் அறியாமல், தான் படும் துன்பங்களையும் உணராமல் சுகமாக உறங்குகிறதாம்..

அவ்வாறில்லாமல் தத்துவங்களின் உண்மைப் பொருளான தன் தலைவன் கண்ணன் வருமாறு கூவினால், அந்தக் குயிலுக்கு தன் தலையையே நன்றிக்கடனாகத் தருவதாகக் கூறுகிறாள்..

கோயில்களில் முடி இறக்கி, நம் அகந்தை இறக்கி இறைவனை வழிபடுவதாக, பாசாங்கு செய்யும் நம்மைப் போலல்லாமல், கண்ணனை வருமாறு கூவினால் தன் தலை எனும் அகந்தையை குயிலுக்குப் பரிசாக்கிவிட்டு, தன் தலைவனுடன் சேர விரும்புகிறாள் ஆண்டாள்..

எண் சாண் உடம்பிற்கு, சிரசே பிரதானம் என்பது போல, தன் உடல் இயங்கத் தேவையான தலையையே தருவதாகச் சொல்வதன் மூலம், கண்ணனிடம் தான் கொண்டது, உளப்பூர்வமான அன்புதான் என்று நிரூபிக்கிறாள் கோதை நாச்சியார்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s