நாச்சியார் திருமொழி 46

ulaguநாச்சியார் திருமொழி -46 பாசுரம் 549

ஐந்தாம் திருமொழி பாடல்-5

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் 
வில்லிபுத்தூர் உறைவான் தன் 
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் 
பொரு கயற் கண்ணினை துஞ்சா 
இன் அடிசிலொடு பால்அமுது ஊட்டி 
எடுத்த என் கோலக் கிளியை 
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே 
உலகு அளந்தான் வரக் கூவாய்            

            

மென் நடை – மென்மையான நடை

பரந்து – பரவலாக
பொரு – ஒத்த
கயல்  – மீன்
கண் இணை –இரண்டு கண்களும்
துஞ்சா – தூங்க மறுக்கிறது
இன் – சுவையான

அடிசில் – சுடு சோறு [அடு – சூடேற்றிய, சில் – அரிசி]
பால் அமுது – பாயசம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வில்லிபுத்தூர், வராகத் தலமாக அறியப்பட்ட, காடுகள் நிறைந்த ஊராக விளங்கியது. அக்காட்டில் வசித்த வில்லி, கண்டன் என்ற வேடுவ சகோதரர்கள் வசித்து வந்தனர்.

ஒரு நாள் வழக்கமான வேட்டையின் போது கண்டன் துரத்திச் சென்ற புலி அவனைக் கொன்று தின்றது. இதையறியாத வில்லி, தன் தம்பியைத் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால் மிகவும் சோர்வடைந்து ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கிவிட்டான். வில்லியின் கனவில் தோன்றிய வராகப் பெருமாள், அவன் தம்பி கண்டனுக்கு நேர்ந்த நிலையை எடுத்துரைக்கிறார்.

கம்சனின் முந்தைய பிறவிதான் காலநேமி என்று கூறப்படுகிறது..அசுரனான காலநேமியை வதம் செய்யவே தான் இந்த ஊரில் வராகமாகப் பிறந்ததாக கூறினார் எம்பெருமான். பிறவிப் பெருங்கடலின் துயர் நீக்கும்  வடபத்திர சாயியாக எழுந்தருளி, தம் பக்தர்களைக் கரை சேர்க்க விரும்புவதாகக் கூறினார்.

வடம் என்றால் ஆலமரம்.. பத்ரம் என்றால் இலை என்று பொருள்.. பிரளய காலத்தில் ஆலிலை மேல் சயனித்திருப்பவனான கண்ணனே வில்லிபுத்தூரில் வசிக்கிறான்.

தன் முந்தைய வராக அவதாரத்தில் பூமித்தாயான தன்னை மீட்டது போல, இப்போது கோதையான தன்னை, துன்பக் கடலிலிருந்து மீட்கவே ஆலிலைக் கண்ணனாக அவதரித்து இருக்கிறான் என்று கோதை எண்ணினாள்.

வராகப் பெருமானின் விருப்பத்திற்கேற்ப, வில்லி என்ற வேடுவன் அமைத்த புதிய ஊர், அதாவது புத்தூர் என்பதால் வில்லிப்புத்தூர் என்று வழங்கப்பட்டது.

அன்னப் பறவை தமிழ் நாட்டில் காணப்படாத ஒன்றாகும். இமயம் போன்ற பனியிட வாழ் பறவையாகும்.
முன்காலங்களில் அங்கிருந்து இவற்றைக் கொண்டு வந்து அரண்மனையில் வளர்த்து வருவார்கள்.
அன்னத்திற்கு பாலும் நீரும் கலந்து வைத்தால் நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்தும்.
அது போல, அரசர்கள், நாட்டில் நிலவும் தீமைகளை நீக்கி, மக்களின் குறை தீர்த்து நன்மை செய்வார்கள்.

அன்னம் போலவே தானும் பாற்கடலிலிருந்து பூலோகம் அழைத்து வரப்பட்டவள் என்கிறாள் கோதை நாச்சியார். நம்மிடம் நல்லவைகளையே காணும், அன்னம் போன்ற அன்னையானவள்..

இத்தகைய அன்னங்கள் நிறைந்து காணப்படும் செழிப்பான ஊர் வில்லிபுத்தூர்..ராமனாய் அவதரித்தபோது சீதையான தன்னை மீட்க காடு மேடெல்லாம் தன் திருவடிகளால் நடந்த களைப்பு நீங்க, தற்போது வடபத்ர சாயியாக சயனித்திருக்கிறான்..தனக்காகக் காத்திருக்கிறான் என்று எண்ணிய கோதை, அப்பெருமைமிகு திருவடிகளைத் தரிசிக்க விரும்புகிறாள்.

கயல் மீன்கள் பொதுவாக நன்னீரிலே காணப்படுபவை.. அவை மற்ற மீன்களை உண்ணாது..வயல்வெளிகளில் காணப்படும் தீமை செய்யும் பூச்சிகளையும், பாசிகளையும் உண்டு வாழக்கூடியவை. அவை எப்போதும் புரண்டு கொண்டே இருக்கும்..துள்ளிக் குதிக்கும்..

கயல்மீன்களை ஒத்த தன் இரு கண்களும் அவை போலவே, தூங்காமல், எப்போதும் கண்ணனைத் தேடியவாறு புரண்டு கொண்டே இருப்பதாகக் கூறுகிறாள் கோதை நாச்சியார்..

ஆனால், பாற்கடலில் தன் மனைவியானாலும், பூவுலகில் பிறந்ததால், சாதாரண பெண்ணைப் போல கோதையும் பிரிவால் வாடுகிறாள். பசலை நோய் பீடித்துக் காணப் படுகிறாள்.

இது போன்ற பற்று எனும் நீர்மை நீக்கிய பின், தன்னிடம் சேர்க்க விரும்பி, மிகவும் தாமதப் படுத்துகிறான், வில்லிபுத்தூர் வாழும் கண்ணன்.

தான் மிகவும் பலவீனமடைந்து, பேசுவதற்குக் கூட நா எழும்பாத நிலையில், கண்ணனிடம் தனக்காகத் தூது செல்ல பச்சைக் கிளியைப் பழக்கப்படுத்தி இருந்தாள் ஆண்டாள்.. அக்கிளி இவள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே கண்ணனிடம் சென்று தெரிவிக்கும்.. அதற்கு உணவாக, இனிப்பு சேர்த்த [பாலில் இருக்கும் நீரால் சமைக்கப் பட்ட அரிசி] சுவையான பாலன்னத்தை தந்து பழக்கியிருந்தாள்…உணர்வையே உணவாக்கினாள்..

ஆனால் சோலையில் இருக்கும் குயிலோ தன் விருப்பத்திற்கு ஏற்ப உண்பதால், அதன் படிதான் பாடும்.. ஆகையால் தன் உணர்வை குயிலிடம் ஒவ்வொன்றாகத் தெரிவித்து, அதற்கேற்றார்போல் குயிலைக் கூவச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு தற்போது அதற்கும் வலுவில்லை.. ஆகையால் ஏற்கனவே தன் எண்ணம் என்னவென்று புரிந்த கிளியை குயிலுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறாள்..

கோதைக்கு எப்போதுமே வாமன-திருவிக்கிரம அவதாரங்களில் ஒரு ஈர்ப்பு.. ஏனெனில் அந்த அவதாரத்தில் தான் மேலுலகம், பூலோகம், பாதாளம் எல்லாவற்றையும் சமமாகக் கருதி அளந்தான் பரந்தாமன்..யாரும் மாறுவதற்காகக் காத்திருக்கவில்லை.. எந்த நிலையிலிருந்தாலும், எந்தத் தன்மையில் இருந்தாலும், எங்கு இருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டான்..

தன் அழகிய கிளியையும் அந்த உலகு அளந்தான் பெயர் சொல்லவே பழக்கப் படுத்தி இருந்தாள் கோதை நாச்சியார்..

ஆகையால் குயிலைக் கிளியோடு நட்பாகி, அதனிடமிருந்து கற்று, தான் இப்போதிருக்கும் இந்த நிலையிலேயே தன்னை மீட்க, புகழ் ஓங்கிய திருவடிகளைத் தரிசிக்க, உலகளந்த திருவிக்ரமனை வரச்சொல்லிக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்….

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

Advertisements

2 Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s