நாச்சியார் திருமொழி 45

garudan

நாச்சியார் திருமொழி -45 பாசுரம் 548

ஐந்தாம் திருமொழி பாடல்-4

என்பு உருகி, இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்,
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்..
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே..
பொன் புரை மேனிக்கு அருளக், கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய்

என்பு – எலும்பு

இன வேல் நெடுங்கண்கள் – பெண்ணினத்திற்கே உரித்தான, வேல் போன்ற, நீண்ட கண்கள்.

புக்கு – புகுந்து

பொன் புரை மேனி – பொன்னின் நிறத்தை ஒத்த மேனி

பல வித மலர்கள் கொண்ட சோலையில் பூக்கள் மலர்கின்றது. மொட்டுகளின் நறுமணம் காற்றை நிறைக்கிறது. செடிகளிலும் பூக்களிலும் பனித் துளிகள் நிறைந்து காணப் படுகின்றது. வனத்தை வளமாக்கும் பொறி வண்டுகள் இசைக்கின்றன. மரப் பொந்துகளில் குயில்கள் தங்கள் இணைகளுடன் கூடி மகிழ்கின்றன.

கோதை நாச்சியார், இவைகளில் எவற்றாலும் ஈர்க்கப்படாமல், தான் விரும்பியவரைக் காண இயலாமல், வருந்தி அழுது, கண்களில் கண்ணீர் வற்றி, வாடி இருந்தாள்.

பசலை என்பது உணவு,உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் கண்கள் குழி விழுந்து, உடல் இளைத்து, கருத்துப் போவது இயற்கைதான். இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர்.

பொதுவான நோய்களை, அதற்கான மருந்து  உட் கொண்டு, உறங்கிக் குணப்படுத்த முடியும். ஆனால் காதலரின் மேனி கருத்துப் போவது என்பது ஆற்ற முடியாத நோய். காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய். இந்நோய் பற்றி, காதலித்து, பிரிவுத்துயரை அனுபவித்தவர்களுக்கு நன்கு புரியும்.

பல நாட்களாக உண்ணாமல் கண்ணனின் நினைவுகளையே சிந்தித்துக் radha-raniகொண்டிருந்ததனால், உடல் நலிந்து, எலும்புகள் உருகியது போல பலவீனமாக உணர்ந்தாள் ஆண்டாள் நாச்சியார். கண்கள் இமைக்காமல் கண்ணனைத் தேடியதால், கண்ணிமைகள் ஒன்றை ஒன்று பொருந்தாது, ஈரப்பசை இல்லாமல் போனது. தங்கம் போல ஒளி விடும் மங்கையான கோதையின் நிறம் மங்கி, கண்ணனைப் பிரிந்த காதல் நோயால் ஒளி குன்றியது.

அன்பு உடையவர்களைப் பிரிந்தால் வரும் நோயை குயிலும் அறியும் என்று அதையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்கிறாள்.. குயிலின் கருப்பு நிறம் பசலை நோயால்தான் காரணம் கற்பிக்கிறாள்…

உடலில் தோன்றும் வேறு எந்த நோய்களுக்கும் வெவ்வேறான மருந்துகள் இருக்கிறது.. ஆனால் காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்பதை,….

“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”

என்று வள்ளுவர் கூறுகிறார்..

எதுவொன்றின் மீதான பற்றையும் விடுத்து, கண்ணனையே பரம் பொருளாக தியானித்து வழிபடும் போது, இறப்பும் பிறப்புமாகிய துன்பக் கடலிலிருந்து நம்மைக் கரை சேர்ப்பதாக கண்ணன் கீதையில் கூறியுள்ளான்.

அது போல தன் நோயும் மருந்தும் கண்ணனே என்று கூறுகிறாள் கோதை நாச்சியார். திருப்பாற்கடலில்,  கண்ணனோடு அவனின் நாயகியாக இன்பமாக இணைந்திருந்தாள்.. அவ்வாறான தன்னை, அவனைப் பிரிந்து, இப்புவியில் பிறந்து உழலும் துன்பக் கடலிலிருந்து தன்னைக் கரை சேர்க்கவும், தோணியாக அதே வைகுந்தன் தான் வரவேண்டும் என்கிறாள்.. அவனைப் பெற முடியாமல் மன உளைச்சலில் தவிப்பதாகக் கூறுகிறாள்..

சென்ற பாடலில் வில்லேந்தியவர்களுள் ராமனாவேன் என்று கண்ணன் கூறியதை நினைவு கூர்ந்த கோதை, இப்பாடலில் பறவைகளில் கருடனாவேன் என்பதைக் குறிப்பிடுகிறாள்..

பரம பதத்தில், தன்னலமில்லாத தொண்டு புரிபவர்களான, நித்ய சூரிகளில், கருடன் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறார்  பாற்கடலைக் கடைந்த போது திருமாலின் கட்டளைப்படி மந்தார மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன். யாருக்கும் அஞ்சாதவர். இவர் தன் அன்னையின் அடிமைத்தனம் நீக்க, பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை எடுத்துச் சென்றார். அவரை  தேவேந்திரனாலும் தடுக்கமுடியவில்லன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்கமடையச் செய்தார். இவரின் வீரத்தில் மகிழ்ச்சிகொண்ட திருமால் வெற்றிக்கு அறிகுறியாகத் தன் கொடியிலும் விளங்கச் செய்தார். அதனால்தான் கருடனைப் பார்த்தால் நல்ல சகுனம் என்பது வழக்கம்.

அது மட்டுமல்லாமல் கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், தொலைந்த பொருள் கிடைத்தல் போன்ற நம்பிக்கைகளும் உண்டு..

தன் பக்தர்களின் துயர் நீக்க உடனடியாக ஓடோடி வருவது கருட வாகனத்தில் தான்.. கண்ணனின் மனமறிந்து அதன்படி செயல் படுபவன், தன்னலம் கருதாக் கருடன்.. அவனைத் தன் கொடியில் இடம் பெறச் செய்து தன் தூய உள்ளத்தைக் காட்டிய புண்ணியவான் கண்ணன்.

அது மட்டுமன்றி பிறப்பு, இறப்பு மற்றும் இடையில் உண்டாகும் எத்துன்பங்களாலும் பாதிக்காத, புண்ணியம் செய்தவன்…

முடிவில்லாதவனும்,  அளவிடமுடியாதவனும், எல்லையற்றவனுமாகிய இறைவன் எனும் புண்ணியன்…

கோதைக்கு கொடி என்றாலே அது கருடக் கொடிதான்…

தற்போது பசலை நோயால் கருத்து காணப் படும் தன் அழகிய பொன் போன்ற மேனி, பழையபடி, தன் ஒளியைத் திரும்பப் பெற விரும்புகிறாள்.

தன்னுடைய நோய் தீர்க்கும் அமிர்தமான கண்ணனைத் தாங்கி வரும் கருடனை எதிர்நோக்குகிறாள்.. ஆகையால், பெரும் வெற்றியைத் தருபவனான கருடனைத் தன் கொடியில் கொண்ட கண்ணன் எனும் புண்ணியன் வருமாறு குயிலைக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்….

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s