நாச்சியார் திருமொழி 44

ramaநாச்சியார் திருமொழி -44 பாசுரம் 547
ஐந்தாம் திருமொழி பாடல்-3

மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் 
      
இராவணன் மேல் சர-மாரி 
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த 
      
தலைவன் வர எங்கும் காணேன் 
போது அலர் காவிற் புதுமணம் நாறப் 
      
பொறி வண்டின் காமரம் கேட்டு உன் 
காதலியோடு உடன் வாழ் குயிலே என் 
      
கருமாணிக்கம் வரக் கூவாய் 

மாதலி – இந்திரனின் தேரோட்டி

கோல் –தேரை இழுக்கும் குதிரைகளை வழி நடத்தும் கழி

சரமாரி – அம்பு மழை  

போது – மலர் அரும்பு

அலர் – மலரும்

கா – சோலை

நாற – மணம் வீச

காமரம் – இசைப் பண் (ராகம்) 

இராமாயண யுத்த காண்டத்தில், பூமியில் நின்று ராமரும்,  ரதத்தில் இருந்து ராவணனும், கடுமையாகப் போரிட்டனர். இது சமமான போர் அல்ல என்று கருதிய தேவர்கள் தலைவன் தேவேந்திரன், மாதலி என்ற தன் தேரோட்டியை ராமனுக்கு உதவியாக அனுப்பி வைத்தான்.  தேவர்களுக்கு நன்மை தரக் கூடிய போருக்கு உதவும் விதமாக அனுப்பிய அந்த ரதம் உயர் வகை குதிரைகள் பூட்டப்பெற்று, பொன்னாலும், மதிப்பு வாய்ந்த பல்வகைக் கற்களாலும் அழகிய வேலைப்பாடுகள் செய்யப் பட்டு, ஆயிரக்கணக்கான மணிகள் ஒலித்திட, இளம் சூரியன் போல் ஒளிவீசி, அதன் உச்சியில் வெள்ளியிலான கொடியுடன் பேரழகுடன் கம்பீரமாகத் தோற்றமளித்தது.

உலக நன்மைக்காகவும், தீவினைகளை அழிக்கவும், நல்வினைகள் பெருகவும், மிகுந்த  துன்பத்துக்கு ஆட்பட்ட தேவரும், முனிவரும் நிம்மதி பெற, இராமபிரான் அந்தத் தேரின் மீது ஏறி போருக்குப் புறப்பட்டான்.

பெரும்பாலான நேரங்களில் இந்திரன் தன் செருக்கால், அவசர புத்தியால் போர் புரியும் பொழுது எல்லாம் அவன் தோற்கடிக்கப்படுவான். அதனால் இந்திர ரதத்தின் சாரதியான மாதலிக்கு, தேரைப் பின்புறம் செலுத்தியே பழகிவிட்டது.

ஆனால் இப்போது போர் புரிவது இராமன். அவன் தேவையின்றி போர் புரிய மாட்டான். அதுவும் தன்னால் இயன்ற அளவு, சமாதானத்திற்கு பல விதமாக முயன்ற பிறகு, தன் அன்பர்களை இழந்த பிறகு, தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களைக் காக்கும் பொருட்டு, இராவணனுடன் போர் புரிந்தான்.

பிறர் நன்மைக்காக, நேர்மையுடன் முன்னின்று, முனைப்புடன் போரிட்டதால், இராமனுக்கான மாதலியின் தேர் முன் சென்றது.

நேர்மையற்று இராவணன், கபட சன்யாசியாக வந்து, சீதையான தன்னைக் கவர்ந்து சென்றதால், வெகுண்ட ராமன், தன் வில்லிலிருந்து அம்புகளை மழை போலத் தொடுத்தான். அதில் இராவணனின் உயிர் போக்கும் விதமாக, உப தலைகளுடன் கூடிய, தாய் தலை உள்ளிட்ட பத்து தலைகளும் அறுந்து அறுந்து வீழ்ந்தன..    

பூவின் நிலைகள்:

முதலில் – அரும்பு,

பனியில் நனையும் போது- நனை

நனைந்து முத்தாகும் போது – முகைporivandu

 வெடிக்கத் தயாராக இருக்கும் போது-மொக்குள்

விரிந்து கொண்டிருக்கும் நிலையில்- போது

மணம் வீசத் தொடங்கும் போது –முகிழ்

மலர்ந்த பின்- மலர்

நன்றாக மலர்ந்த பின் மகரந்தம் பரவும் போது –அலர்

மலர்க்கூட்டம் – பொதும்பர்

வீழும் போது –வீ

உதிர்ந்த பூக்கள்-பொம்மல்

பழுப்பாய் வாடிய பின் – செம்மல்

அரும்புகள் மலர ஆரம்பிக்கும் போது அதன் முதல் மணம், மிகவும் அற்புதமாக இருக்கும்.. அந்த நறுமணம் வீசும் மலர்ச் சோலையில் பொறி வண்டுகள் ரீங்கரிக்கும்..

பொறி வண்டு என்பது நன்மை பயக்கும் வண்டு.. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கறுப்புப் புள்ளிகளுடன் காணப்படும்.. அது செடிகளை அழிக்கும் பூச்சிகளைத் தின்றுவிடும்.. ஆகையால் சோலையின் வளத்திற்கு எந்த பாதிப்பும் வராது..

தீமைகளை அழித்து நன்மை செய்வதால் பொறி வண்டின்  ரீங்காரத்தைக் கூட காமரம் என்று ஒரு வித இசைப் பண்ணாகப் பெருமை செய்கிறாள் ஆண்டாள் நாச்சியார்..

இத்தனை அழகு வாய்ந்த சோலையில், இவை எதையும் ரசிக்க முடியாமல், கண்ணனைப் பிரிந்த துயரால்  தான் தனித்திருக்க, தன் சோகம் தெரியாமல், தன் காதலியுடன் களித்திருக்கும் குயிலைப் பொறாமையுடன் பார்க்கிறாள் கோதை நாச்சியார்.. 

இலங்கையும் இது போன்ற சோலைகள் நிரம்பிய வெகு அழகான ஊர்… அங்கும் இதுபோல்தான் தன் தலைவனைப் பிரிந்து, தனித்து வாடினாள் சீதை அன்னை..

ஆகையால் இச்சோலையும் ஆண்டாளுக்கு இலங்கை அசோக வனத்தையே நினைவூட்டுகிறது..முன்பு சீதையான தன்னை மீட்கும் பொருட்டு, ராமன் வந்தது போல, தற்போது கண்ணன் வருவானென்று நினைத்திருக்கிறாள்.. ஆனால் எங்கும் தென்படவில்லை.. என்று மனம் கலங்கித் தேடுகிறாள்..

ராமனாவது, நிதானமாக,  நேர்மையின் இலக்கணமாக வகுத்த விதிகளைப் பின்பற்றி அதன்படிதான் செயல் படுவான். ஆனால் கண்ணனோ கடவுளரிலும் மாணிக்கம் போன்றவன்…

மண்ணிலிருந்து கிடைக்கும் மாணிக்கம் தன் உறுதிக்கும், அழகுக்கும் பெயர் பெற்றது..  

அது போலவே தன் பக்தர்கள் நலன் காப்பதில் மிகுந்த மன உறுதி கொண்டவன் கண்ணன். அன்பர்களின் ஆபத்து நீக்கும் அவசரம் கருதி , எதையும் செய்து, அச்செயலை நியாயப் படுத்திவிடுவான்..புது இலக்கணம் படைப்பான்..  

கண்ணனைப் பிரிந்து வாடும், கோதையான தன்னை மீட்க, கரு மாணிக்கம் போல நிறமும் குணமும் கொண்ட, தன் கணவனை வருமாறு குயிலைக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s