நாச்சியார் திருமொழி 43

panchajanyaநாச்சியார் திருமொழி -43 பாசுரம் 546
ஐந்தாம் திருமொழி பாடல்-2

வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட 
      
விமலன் எனக்கு உருக் காட்டான் 
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் 
      
உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும் 
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் 
      
களித்து இசை பாடும் குயிலே 
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் 
      
வேங்கடவன் வரக் கூவாய்

விளிசங்கு – அழைக்கும் சங்கு

 இடங்கை – இடக்கை

 விமலன் – தூயவன்

 உருக்காட்டான் – உருவத்தைக் காண்பிக்க மாட்டான்

 நைவித்து – நோகச் செய்து

உயிர்ப்பு எய்து – உயிர் பெற்று [தன் நினைவு திரும்பி ]

 கூத்தாட்டுக் காணும் – வேடிக்கை பார்ப்பான்

கள் அவிழ் – தேன் ததும்பும்

 கோதி – வருடி

 மிழற்றுதல் – குயிலின் கொஞ்சல் கலந்த கூவும் ஒலி.

வெண்மை நிறம் தூய்மையைக் குறிக்கும்..  நன்மை தரும் சக்திகளை வரவழைக்கவும் தீய சக்திகளை விரட்டவும் வெண்மையான சங்கை ஒலிக்கச் செய்வது வழக்கம்..

ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஒரு இடம்புரிச் சங்கும், ஆயிரம் இடம்புரிச் சங்குகள் இருக்குமிடத்தில் ஒரு வலம்புரிச் சங்கும், ஆயிரம் வலம்புரிச் சங்குகள் இருக்குமிடத்தில் ஒரு சலஞ்சலமும், ஆயிரம் சலஞ்சலங்கள் கூடிய இடத்தில் ஒரு பாஞ்ச சன்யமும் இருக்கும் என கடல் ஆராய்ச்சி கூறுகிறது. அந்தப் பாஞ்ச சன்யம் தான் கண்ணனின் இடது கையில் இருக்கும் அரிதான சங்கு… 

உரத்து முழங்கிய சங்கொலியால் தன் தேவையின் தீவிரத்தைக் கண்ணன் காட்டியது போல, குயிலின் உரத்த கூவுதலால், தான் கண்ணனுடன் கூட வேண்டிய அவசரத்தை/அவசியத்தைக் கூறுகிறாள்..    

தன் உள்ளத்தில் புகுவதும் பின்பு தன் சேட்டைகளால் மனதை நோகச் செய்தும் வேடிக்கை செய்கிறான் கண்ணன்.

இவனோடு மல்லுக் கட்ட முடியாது என்று ஒதுங்க நினைக்கும்போது மறுபடி வந்து ஆசை காட்டுகிறான். இவனுடனான வாழ்வு தினமும் செத்துப் பிழைப்பது போல உள்ளது..                 

 கண்ணன், தன் பக்தர்களின் நலன் கருதியே அனைத்துச் செயல்களையும் செய்கிறான். குற்றமற்றவன் அவன்..புனிதன்.. தன் போலவே, தூய உள்ளத்தோடு பலனை எதிர்பாராது உலக நலனுக்காக சிந்தித்து, அதன் பொருட்டு உழைப்பவர்களை, காண்பதற்கு அரிதானவர்களை அழைக்கவே சங்கை முழங்குகிறான்..

ஆகையால், என்னதான் தன்னை நோகச் செய்தாலும் தன் அன்புக்கு உரியவன் அவன்.. தன் கணவன்..தன்னலமற்றவன், தூயவன் என்று உருகுகிறாள் கோதை..

பொதுவாகவே பிறர் துயர் நீக்கும் எண்ணங்களை உடையவர்களைக் காண்பது அரிது.. கண்ணனோ உலக உயிர்களின் துயர் நீக்குபவன்.. அவனைக் காண்பது எளிதல்ல.. அவன் விரும்பும் செயல்களைச் செய்து அவனின் கவனைத்தை ஈர்க்க, முயற்சி வேண்டுமானால் செய்யலாம்..அதைத்தான் குயிலின் மூலம் கோதை செய்கிறாள்.

தான் இவ்வாறு கவலையில் ஆழ்ந்திருக்க, குயிலோ அங்கிருந்த செண்பக மலரின் தேனை அருந்திக்கொண்டு இருக்கிறது.. போதாதற்கு, மிகுந்த ரசனையுடன் அதிலிலுள்ள தேனின் கடைசிச் சொட்டு வரை அருந்தும் பொருட்டு, அம்மலரின் ஒவ்வொரு இதழையும் தன் நாவால் வருடிக் கொண்டிருக்கிறது..

இவ்வாறு ரசித்து ருசித்து உண்ட தேனின் மயக்கத்தால், தன் அருகில் வந்து, அழகாகக் கூவுவதாக நினைத்து, தன் இணையுடன் முன்பு பேசியதை எல்லாம், கொஞ்சிக் கொஞ்சி உளறிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தன் சுகம் பற்றியே நினைத்துக்கொண்டு கூவுவது பெரும் பாவம்..

வேங்கடம் என்பது தீ வினைகளைப் போக்கும் இடமாகும். கடம் என்பது நம் வினைகள்.. பிறவிக் கடன்கள்.. அதைப் பொசுக்கும் வெம்மைத் தன்மை கொண்டது வேங்கடம்.

தன் அடியவர்களின் பாவங்கள் தீர்க்கும் பொருட்டு, திருமகளான தன்னைப் பிரிந்து, வேங்கடமலையில் தனித்து இருக்கிறான் கண்ணன். தன்னைப் பிரிந்த, வெப்பத்தில் தவிக்கும், தன் துணைவனை, தன்னைக் காணச் செய்வதின் மூலம்,அவனையும் குளிர்வித்து, தன்னையும்  குளிர்விக்கச் சொல்கிறாள்..அதன் மூலம் குயிலின் பாவங்களைப் போக்கிக் கொள்ளச் சொல்கிறாள்.. 

நம் வினை தீர்க்க இம் மண்ணில் பிறவி எடுத்து, தன் மாதவனைப் பிரிந்தவள், மீண்டும் அவனைச் சேர வேங்கடவனை வரச் சொல்கிறாள்.

கண்ணனின் நாமம் ஒன்றையே கூவி, தன் இருப்பிடம் தெரிவித்து, எங்கோ மலை மேல் தனியாகக்  காத்திருக்கும், தன் வேங்கடவனைத், தன்னைச் சேர வருமாறு குயிலைக் கூவச் சொல்கிறாள் கோதை நாச்சியார்…..

ஆண்டாள் திருவடிகளே சரணம் …_/\_….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s